வேலைவாய்ப்புகளை உருவாக்கும் கல்வி நிலையங்கள்.. 'கெத்து' காட்டும் யு.எஸ்.. இந்தியாவின் நிலை தெரியுமா?
டெல்லி: உலகளாவிய வேலைவாய்ப்பு பல்கலைக்கழக தரவரிசை மற்றும் கணக்கெடுப்பில் (GEURS) சிறந்த கல்வி நிலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள முதல் 100 கல்வி நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த 3 கல்வி நிலையங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
உலகம் முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றிற்காக கடும் போராட்டம் நடத்த வேண்டி உள்ள சூழலில் இந்திய நிறுவனங்கள் இந்த விஷயங்களில் சிறப்பாக செயல்பட்டிருப்பதை நிரூபித்துள்ளதாக கல்வியாளர்கள் 'GEURS' அறிக்கையை சுட்டிக்காட்டி கூறியுள்ளனர்.
கடந்த காலகட்டங்களில் வேலைவாய்ப்பு விகிதம் கடும் சரிவை கண்ட நிலையில் இந்தியா அதிலிருந்து மெல்ல மீண்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

முதல் 50 இடங்களில்
'Emerging HR Consultancy' எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை பிரிட்டனின் Times Higher Education (THE) எனும் இதழ் வெளியிட்டுள்ளது. ஆய்வின்படி உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் கல்வி நிறுவனத்தின் (GEURS) பட்டியலில் இந்தியாவை சேர்ந்த டெல்லி ஐஐடி 28வது இடத்தை பிடித்திருக்கிறது. மட்டுமல்லாது GEURS பட்டியலில் முதல் 50 இடங்களில் இருக்கும் ஒரே இந்திய நிறுவனமும் இதுதான். கடந்த ஆண்டு இந்த கல்வி நிறுவனம் 27வது இடத்தில் இருந்திருந்தது. தற்போது ஒரு இடம் சரிந்திருக்கிறது. இந்த பட்டியில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள்தான் எப்போதும் முதல் மூன்று இடங்களை தக்க வைத்துக்கொண்டிருக்கும்.

முன்னேற்றம்
அந்த வகையில் இந்த ஆண்டும் முதலிடத்தில் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும், இரண்டாவது இடத்தில், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியும் மூன்றாவது இடத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் இடம்பிடித்துள்ளன. இந்தியாவை பொறுத்த அளவில் டெல்லி ஐஐடி ஒரு இடம் சரிந்து இருந்தாலும், மற்ற மூன்று இடங்களில் உள்ள கல்வி நிலையங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளன. அதன்படி இந்திய அறிவியல் கழகம் (IISc) 58வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இது 61வது இடத்தில் இருந்தது.

மற்ற கல்வி நிலையங்கள்
அதேபோல பெங்களூர் மற்றும் பாம்பே ஐஐடிக்கள் 72வது இடம் பிடித்துள்ளன. இதில் பாம்பே ஐஐடி கடந்த ஆண்டு 97வது இடத்தில் இருந்தது. GEURS பட்டியலில் தலைசிறந்த 250 கல்வி நிலையங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஐஐஎம் அகமதாபாத் 154வது இதில் இருக்கிறது. கடந்த ஆண்டில் இது 162வது இடத்தில் இருந்துள்ளது. அதேபோல ஐஐடி காரக்பூர் கடந்த ஆண்டை காட்டிலும் 15 இடங்கள் முன்னேறி 155வது இடத்தில் இருக்கிறது. அமிட்டி பல்கலைக்கழகம் 225வது இடத்திலும், பெங்களூரு பல்கலைக்கழகம் 242வது இடத்திலும் இருக்கிறது.

இந்தியாவின் சூழல்
இந்த ஆய்வுகள் உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 98,014 வாக்குகளின் அடிப்படையில் வெளியாகியுள்ளன. இந்தியாவை பொறுத்த அளவில் வேலைவாய்ப்பு விகிதம் என்பது கடந்த 2020 கொரோனா காலகட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் 8%ஐ தொட்டது. ஆனால் இந்த காலகட்டம் முடிந்த பின்னர் இந்நிலை இயல்புக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.98% என்கிற அளவில் நின்றுவிட்டது. அதாவது, கடந்த 21 ஆண்டுகளாக இந்த அளவுக்கு வேலையின்மை அளவு உயர்ந்தது கிடையாது. இவ்வாறு இருக்கையில் தற்போது GEURS ஆய்வுகள் வெளிவந்துள்ளன.












Click it and Unblock the Notifications