இந்தியாவுக்கு "லட்டு" போல கிடைத்துள்ள சான்ஸ்! பிரிட்டன், ஜப்பான் தள்ளாடும் போது அடித்த ஜாக்பாட்
டெல்லி: ஜப்பான் மற்றும் பிரிட்டன் நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், இது இந்தியாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. இது இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையலாம்.
உலகின் இரு முக்கிய நாடுகளான ஜப்பான் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அடுத்தடுத்து பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அங்கே விலைவாசி உயர்வு, பணவீக்கம் எனப் பல பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பே இதற்குக் காரணமாகும். கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் எந்தளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.
உலக நாடுகள்: பிரிட்டனைப் பொறுத்தவரை அங்கே கடந்த இரண்டு காலாண்டுகளிலும் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து இருக்கிறது. பொருளாதாரத்தை மீட்க அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் எடுத்த நடவடிக்கைகள் பெரியளவில் பலன் தரவில்லை. இந்தாண்டின் இறுதியில் அங்கே பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், பொருளாதார மந்த நிலை ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
மறுபுறம் ஜப்பான்.. ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த ஜப்பான் கூட கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து தப்ப முடியவில்லை. அங்கே கடந்த சில மாதங்களாக மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிலும் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்து இப்போது 4ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
2024 ஆரம்பித்து 2 மாசம் கூட ஆகல.. அப்படியே நடக்கும் பாபா வங்கா கணிப்பு! அப்போ அடுத்து அதுதானா? பகீர்
ஜெர்மனி: இந்த இரு நாடுகள் மட்டுமில்லை.. பல நாடுகளில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கியமான நாடான ஜெர்மனியில் ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கே உக்ரைன் போருக்குப் பிறகு எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வட்டி விகித உயர்வு, புது கட்டுப்பாடுகள், தொழிலாளர்கள் பற்றாக்குறை எனப் பல காரணங்களால் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் சிக்கலைச் சந்தித்துள்ளது.
இந்தியா: இப்படி உலகின் பல நாடுகளிலும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் பார்வை இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. 2026 அல்லது 2027ஆம் ஆண்டுகளில் பொருளாதார உற்பத்தியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் இந்தியா ஓவர்டேக் செய்ய வாய்ப்புள்ளதாகச் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் இந்தியா பக்கம் திரும்பியுள்ளனர்.
தற்போதைய சூழலில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது. அதன் வளர்ச்சி 2024இல் 6.2 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது, அமெரிக்கா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அடுத்தகட்ட பாய்ச்சல்: இதில் சீனாவில் ரியல் எஸ்டேட் சந்தையின் பாதிப்பால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பொருளாதார மந்தநிலையும், ஜெர்மனில் மற்ற சிக்கல்களும் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா பொருளாதாரத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலை நடத்த இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
2023ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) $27.94 டிரில்லியன் ஆகவும் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $17.5 டிரில்லியன் ஆகவும் இருந்தது. அதேநேரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 3.7 டிரில்லியன் டாலராக இருக்கும் நிலையில், மற்ற நாடுகளை விட இந்தியா படுவேகமாக 7% வீதத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் இந்தியா மிக முக்கிய நாடாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
என்ன காரணம்: இதுநாள் வரை உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளைச் சீனாவில் மட்டுமே வைத்திருந்தன. இதனால் கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டன. இதனால் ஆப்பிள் தொடங்கிப் பல நிறுவனங்களும் சீனாவுக்கு வெளியே உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க முடிவு செய்துள்ளன. அவர்களின் முக்கிய சாய்ஸாக இந்தியா இருப்பதால், இது இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதனால் வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருகிறது, இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உலக பொருளாதாரத்தில் முக்கிய நாடாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications