அண்ணாமலை 2.0.. அமித்ஷா சொன்ன ஒற்றை வார்த்தை.. உற்சாகத்தில் பாஜகவினர்
டெல்லி: அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு வேறு பதவிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதிருந்தே தமிழ்நாடு அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களில் தீவிரமாகி வருகின்றன. ஆளும் திமுகவை எதிர்க்க அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. அவர்களுடன் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

அதிமுக - பாஜக கூட்டணியில் கடந்த காலங்களிலேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அது இப்போதும் தொடர்கிறது. கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது. சமூகவலைதளங்களிலும் அதிமுக - பாஜக இடையே வார்த்தை போர் ஏற்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணியில் தொடர்ந்து விவாதம் ஏற்படுமளவுக்கு பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரபல தமிழ் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலை மையமாக வைத்து மேலும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. "2026 தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும்." என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு, "அதிமுகவை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்." என்று அமித்ஷா பதில் அளித்துள்ளார். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஓரம் கட்டுவதற்காகவே அவரின் பெயரை முதல்வர் வேட்பாளர் கேள்விக்கு தவிர்த்துவிட்டு, கூட்டணி ஆட்சி குறித்து மீண்டும் விவாதம் ஏற்படும் வகையில் பேசியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நேர்காணலில் அமித்ஷா அண்ணாமலை குறித்தும் பேசியுள்ளார். அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருந்தார். அவர் அதிமுக கூட்டணியில் இருந்தபோதே அவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். 2024 தேர்தலில் அந்த கூட்டணி முறிந்த நிலையில், பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனால் பெரியளவுக்கு வெற்றி பெறவில்லை.
இதையடுத்து பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நான் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இதனால் அண்ணாமலை மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். நயினார் நாகேந்திரன் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கு அந்தக் கட்சியில் தொண்டர்களில் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அண்ணாமலைக்கு தேசியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமித்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாளிதழுக்கு நேர்காணல் வழங்கிய அமித்ஷாவிடம் இதுகுறித்து மீண்டும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமித்ஷா, "ஆம் நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவருக்கு தேசியளவில் பொறுப்பு வழங்கப்படும்." என்று மீண்டும் கூறியுள்ளார். தேசியளவில் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும் மாநில அளவில் அண்ணாமலை முக்கிய பங்காற்றுவார் என்று அமித்ஷா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications