ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் உள்ள வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி செய்வது போல் வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அடுத்தடுத்து பலரை கைது செய்தனர். ரவுடி நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாகவும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஏ2 குற்றவாளியாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் அவரது மனைவி பொற்கொடி ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை கோரியும், சிபிஐ விசாரணை உத்தரவை ரத்து செய்யவும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள், "சென்னை ஐகோர்ட்டின் சிபிஐ விசாரணை உத்தரவு நீடிக்கும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை" என்று தெளிவுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று 4 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 250 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி 736 பக்க அறிக்கை தயாரித்துள்ளது காவல்துறை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளனர். சிபிஐ விசாரணை என்பது காவல்துறை செயல்பாட்டை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என இக்கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அஸ்வத்தாமன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தன்னை இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். சிபிஐ விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மனுவுக்கு பதிலளிக்க ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை கோருவதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications