விஜய் நிகழ்ச்சியில் திடீரென அலறி துடித்த பவுன்சர்.. வேகமாக வந்த கார் காலில் மோதியதால் துயரம்
கரூர்: கடந்த ஆண்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கும் ஆணையை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். இதற்காக விஜய் கரூர் சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பவுன்சரின் காலில் வேகமாக வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த அவர் அலறி துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது கரூர் வேலுச்சாமி புரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்நிலையில் தான் பலியானவர்களின் குடும்பத்துக்கு இன்று விஜய் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். இதற்காக முதல்வர் விஜய் இன்று கரூர் சென்றுள்ளார்.
10 ஏக்கரில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். க்யூஆர் கோட் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்றே வெளியானது. ஆனாலும் விஜய்யை பார்க்க ஏராளமானவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு காலை முதல் குவிந்தனர்.
இதனால் போலீசார் மட்டுமின்றி பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வேகமாக வந்த கார் பவுன்சர் ஒருவரின் காலில் மோதியது. இதில் அந்த பவுன்சர் காயமடைந்தார். அவரால் நடக்க முடியவில்லை. இதனால் அலறி துடித்தார். இதையடுத்து அங்கிருந்த தவெக தொண்டர்கள், போக்குவரத்து போலீசார், பவுன்சருக்கு முதலுதவி அளித்தனர். அவரது காலில் தடவி கொடுத்தனர்.
பிறகு மோட்டார் சைக்கிளில் அந்த பவுன்சரை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications