பெரம்பலூரில் அலர்ட் செய்தீங்களே! கரூரில் மட்டும் ஏன் போலீஸ் எங்களை தடுக்கவில்லை! விஜய் கேள்வி
கரூர்: பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது என போலீஸார் சொன்னதால் நாங்கள் மனவலியுடன் திரும்பிச் சென்றோமே அதே போல் கரூரிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது என போலீஸார் எங்களை அலர்ட் செய்திருந்தால் இத்தனை உயிர்களை இழந்திருக்கமாட்டோமே என முதல்வர் விஜய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் அத்தனை பேர் கூடினார்களே அந்த கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு இருந்ததா என்றும் விஜய், மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

கரூர் வெண்ணெய்மலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது ஏன் என்பதை விவரித்தார்.
அவர் பேசுகையில் மக்களை சந்திக்க வேண்டும் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காக மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினேன். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் என பல்வேறு இடங்களுக்கு நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்தோம்.
அரியலூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டுவிட்டு பெரம்பலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நடக்கும் இடத்திற்கு போறது முன்பு, பெரம்பலூர் போலீஸ் வந்து எங்களிடம், கூட்டம் அதிகமாக இருக்கிறது, வராதீங்கன்னு சொன்னாங்க!
போலீஸ் அறிவுறுத்தலை நாம் கேட்டுதானே ஆகவேண்டும். அதே நேரத்தில் பெரம்பலூர் மக்களின் பாதுகாப்பையும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு மனவலியுடன் பெரம்பலூருக்கு போகாமல் திரும்பிவிட்டோம்.
அதன் பிறகு நான் வராததற்காக பெரம்பலூர் தொகுதி மக்களிடம் மன்னிப்பும் கேட்டாகிவிட்டது. அது போல் நாமக்கல்லில் கூட்டம் முடித்துக் கொண்டு கரூருக்கு சென்ற போது அந்த கரூர் போலீஸ் எங்களை அலர்ட் செய்திருக்கலாமே?
"இங்கு எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது. கன்ட்ரோல் செய்ய முடியவில்லை, வராதீர்கள்" என சொல்லியிருக்கலாமே. போலீஸ் நினைத்தால் எந்த ஒரு கூட்டத்தையும் ரத்து செய்யலாமே!
அதையெல்லாம் செய்யாமல் நெடுஞ்சாலையில் இருந்து வேலுச்சாமிபுரத்திற்கு போலீஸே எங்களை உள்ளே கூட்டிட்டு வந்து விட்ட நாடகம் இருக்கு பாருங்க! நம்பிவிட்டேன், அன்று இருந்த கரூர் போலீஸை முழுசா நம்பிட்டேன்.
கரூரில் பேசிய போது "எங்களை கொண்டு வந்து சேர்த்த காவல் துறைக்கு நன்றி" என்றெல்லாம் சொன்னேன். இப்படி ஒரு நாடகம் நடக்கும் என எனக்கு தெரியாது. இதுக்கெல்லாம் யார் காரணம்? இதை யார் சொல்லி செய்தது?
இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்க, ஒரு வேளை அப்படி நடந்தால் இப்படி பண்ணுங்க, இப்படி உத்தரவுகளை பிறப்பித்து அழுத்தம் கொடுத்தது யார்?
அந்த கரூர் கூட்ட நெரிசலில் நாம் யாரை இழந்திருக்கிறோம் என்பது தெரியுமா? டிவியில் என் படமோ பாட்டோ வந்துச்சுன்னா அம்மா விஜய் மாமா, விஜய் மாமா என சொல்லும் பிஞ்சுகளை இழந்துள்ளோம். என் அக்கா, தங்கைகளின் பிள்ளைகளை இழந்திருக்கிறோம்.
கள்ளம் கபடமில்லாமல் கடவுள் போல் சிரித்துக் கொண்டிருக்கும் பச்சை பிள்ளைகளை இழந்திருக்கிறோம். என் அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி ஆகியோரின் குடும்ப உறவுகளை இழந்து அந்த வலியோட இருக்கிற என்னை ஏளனமா பேசுறாங்க!
என் மீது பழியை தூக்கி போடுறாங்க. இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே! இது ஏன் எதனால் நடந்தது, அதன் பின்னணி என்ன என அந்த வலியோடு வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டதாகவும் சொன்னார்கள்.
வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீங்களா? மக்களே நான் உங்களையே கேட்கிறேன், அன்று அங்கிருந்த கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்களா?
இந்த இடத்தில் கூட்டத்தை நடத்த சொல்லி நாங்கள்தான் சொன்னோம் என ஒரு காவல் துறை அதிகாரி பேட்டி கொடுத்தாரே அதற்கு என்ன அர்த்தம்? இவ்வளவோ வலி, காயங்களை கொடுத்துவிட்டு, பழியை தூக்கி நம்ம மேல் போட்டுவிட்டு அதில் ஒரு அரசியல் ஆதாயம் தேடுறீங்களே!
இதில் வாய் கூசாமல் முதல்வராக இருந்த ஸ்டாலின் சட்டசபையில் கரூர் விவகாரம் குறித்து பேசி அங்கையும் என் மீது பழி போட்டு அரசியல் செய்தாரே அதற்கு என்ன அர்த்தம்!
எனக்காக வந்திருக்கும் மக்களை காக்க வைக்கும் அளவுக்கு நான் ஒன்றும் ஆதாயம் தேடும் அரசியல்வாதி இல்லை. மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய்! எனக்காக எல்லாமும் கொடுத்த என் மக்களுக்காக எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருக்கிறேன். நமக்கு இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவங்களுக்கு இந்த 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள்!
அது மட்டும் போதாது! காலாகாலத்திற்கும் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடியை நீங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கணும். இப்படியெல்லாம் செய்தால் நான் மக்களை விட்டு ஓடிடுவேன்னு நினைப்பா? நான் மக்களை விட்டு ஓட மாட்டேன். அன்றைக்கும் சொன்னேன், இன்றைக்கும் சொல்கிறேன் ,நாளைக்கும் சொல்வேன், தில்லா கெத்தா சொல்வேன், பணமா, ஜனமா என கேட்டால் எனக்கு ஜனம்தான்டா முக்கியம்! இவ்வாறு விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.












Click it and Unblock the Notifications