திருச்சி டூ கரூர் இடையே கூட்டம் கூட்டமாக நின்று வரவேற்ற பொதுமக்கள்.. தாமதமாக வந்து சேர்ந்த விஜய்
சென்னை: திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூருக்கு வரும் வழிநெடுகிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக முதல்வர் விஜய்யை வரவேற்றதால் அவர் வெண்ணெய்மலைக்கு சற்று தாமதமாகவே வந்து சேர்ந்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு முதல்முறையாக அதுவும் தமிழகத்தின் முதல்வராக விஜய் இன்று வந்துள்ளார்.

இதற்காக சென்னையில் நீலாங்கரை வீட்டில் இருந்து காலை 9 மணிக்கு விஜய் காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டுச் சென்றார்.
காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த முதல்வர் விஜய்க்கு, அங்கு திருச்சி மாவட்ட அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர், திருச்சியில் இருந்து கரூருக்கு சாலை வழியாக காரில் சென்றார். வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இளைஞர்கள், பெண்கள் என பலர் முதல்வர் விஜய்யின் காரில் மலர்த் தூவி அவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 6500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்த போது விஜயை பார்த்து ஆர்ப்பரித்தனர். விஜய்யும் மக்கள் கூட்டம் இருக்கும் இடங்களில் கார் கண்ணாடியை திறந்து சிரித்தபடியே கையசைத்தார். இதனால் வெண்ணெய்மலைக்கு விஜய் வர சற்று தாமதமானது.
இந்த நிகழ்வு காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர் அரங்கிற்கு வருவதற்கே 12 மணியாகிவிட்டது. இந்த நிகழ்வில் 5000 பேர் பங்கேற்றனர்.
இந்த சந்திப்புக்காக கியூஆர் கோடுடன் கூடிய அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியையொட்டி அட்லஸ் மைதானத்தைச் சுற்றி சுமார் 10 அடி உயரத்திற்கு தகர கொட்டகைகள், தற்காலிக தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டன.
தற்போது 12.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பிற்பகல் 1 மணியளவில் கரூர்- சேலம் புறவழிச் சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவர் சந்தை, திருமாநிலையூர் வழியாக சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழியாக முதல்வர் ரோடு ஷோ நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications