ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. டிரைவர்கள்- பொதுமக்கள் தரப்பு அரசிடம் கூறியது என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் ஆட்டோக்களில் மீட்டர் போட்டு தான் ஓட்ட வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் நடைமுறையில் அப்படி இருக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது. மற்ற மாநிலங்களில் முறையாக நடக்கும் விஷயம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை என்று கூற வேண்டும் என்றால், அது ஆட்டோ கட்டணம் தான்.இதற்கு ஆட்டோ டிரைவர்கள் மட்டும் காரணமல்ல்... கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, முதல் 1.8 கி.மீட்டருக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணமாக 5 நிமிடங்களுக்கு ரூ.3.50, இரவு நேரத்திற்கு இரட்டிப்பு கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண முறை அமலுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை.. இதனால் தான் ஆட்டோ தொழிற்சங்கங்கள் கட்டணத்தை அதிகரிக்க கோரி போராடி வருகின்றன. மற்றொருபுறம், ஆட்டோ டிரைவர்கள் குறைந்தபட்ச கட்டணமே ரூ.100 வரை வசூலிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் தலைமையில் நடந்தது. இதில் போக்குவரத்து ஆணையர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொ.மு.ச. தலைவர் நடராஜன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் பாலசுப்ரமணியம், உரிமை குரல் ஓட்டுனர் சங்க பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹுசேன் உட்பட 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் பால் பர்னபாஸ் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் 90 பேரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தார்கள்.
தொழிற்சங்கங்கள் தரப்பில், ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.5 கி.மீட்டருக்கு ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 வரையிலும் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தனியார் செயலிகள் மூலம் இயக்கப்படும் வாடகை வாகனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள்.
அதேவேளையில், நுகர்வோர் அமைப்புகள் தரப்பில், பொதுமக்களின் நலனைக் கருதி குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.50 ஆகவும், அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.25 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், இரவு 11 மணிக்கு மேல் 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கலாம் என்று கருத்துக்களை கூறினார்கள்.
தொடர்ந்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர், அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆட்டோவில் மீட்டர் பொருத்தி முதலில் இயக்க இருக்கின்றோம். இதற்காக குறிப்பிட்ட இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்வதற்கு ஒவ்வொரு கிலோமீட்டர் தூரத்துக்கும் என்ன கட்டணம் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து இந்த முத்தரப்பு பேச்சில் விவாதித்துள்ளோம்.
ஏனென்றால், இது மக்கள் சம்பந்தப்பட்டது. இதையொட்டி மக்களிடத்திலும் இருந்தும் பல்வேறு கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. இதையெல்லாம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். த.வெ.க., ஆட்சி மக்களுக்கான ஆட்சி. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். தமிழகமே திரும்பி பார்க்கும் வகையிலான அறிவிப்புகள் இருக்கிறது. அதையும் பொறுத்திருந்து பாருங்கள்" இவ்வாறு கூறினார்.














Click it and Unblock the Notifications