அச்சுறுத்தும் ஏஐ பூதம்.. 1 லட்சம் ஊழியர்களுக்கு.. ஒரே அடியாக மெயில் அனுப்பிய TCS.. பறந்த வார்னிங்
டெல்லி: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இது அவர்களின் உலகளாவிய ஊழியர்களில் ஆறில் ஒரு பங்கு ஆகும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக 1 லட்சம் ஊழியர்களுக்கு இந்த வருடம் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த நிறுவனம் சார்பாக மெயில் அனுப்பப்பட்டு உள்ளது.

நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹாரிக் வின் அளித்த பேட்டியில், ஜெனரேட்டிவ் AI-யின் வளர்ச்சி பிற தொழில்நுட்ப அலைகளைப் போலன்றி, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சுயமாகக் கற்றுக்கொண்டு வளரும் AI கருவிகளுக்கு புதிய வகையான சோதனை மற்றும் தரக் கட்டுப்பாடு தேவை. இவை கோடிங் செய்யும் முறையை மாற்ற போகிறது.
டிசிஎஸ் எடுத்த முடிவு
இந்த மாற்றங்களுக்குத் தயாராகும் வகையில், டிசிஎஸ் தனது திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1,00,000 ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஊழியர்கள் AI கருவிகளுடன் பரிசோதனை செய்யவும், ஹேக்கத்தான்களில் பங்கேற்று செயல்முறை அனுபவம் பெறவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்த மாற்றம் ஒரு சவாலானது என்றும், ஒவ்வொரு நிறுவனமும் இதைச் செய்ய வேண்டியிருக்கும். ஜூலை-செப்டம்பர் காலாண்டில், டிசிஎஸ் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ₹12,075 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.4 சதவீதம் அதிகம். ₹11.35 பில்லியன் மறுசீரமைப்பு செலவுகள் காரணமாக இந்த லாபம் சற்று குறைந்துள்ளது. வருவாய் 2.4 சதவீதம் அதிகரித்து ₹65,799 கோடியாக பதிவாகியுள்ளது, எங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஏஐ பயிற்சி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் என்று கூறி உள்ளார்.
பலரின் வேலைகளை பறிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது, இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் சுமார் இரண்டு மில்லியன் வேலை இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது எட்டு மில்லியன் பணியாளர்களைக் கொண்ட இந்தத் துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மில்லியன் புதிய வேலை வாய்ப்புகளையும் AI உருவாக்கும்.. ஆனால மூத்த ஊழியர் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் இதுகுறித்து கூறுகையில், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால், வேலை இழப்புகள் தவிர்க்க முடியாதது. இந்த இரண்டு மில்லியன் வேலை இழப்புகளை மட்டும் பார்க்க வேண்டாம். இந்த இரண்டு மில்லியன் பேரும் சுமார் 20 முதல் 30 மில்லியன் பிற மக்களை ஆதரிக்கும் ஒரு சூழலியல் அமைப்பிற்குள் இருக்கிறார்கள்.
இவர்களின் வருமானம் பொருளாதாரம் முழுவதும் பரவி, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையை உருவாக்கி, பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. இவர்களுக்கு வேலை போனால்.. அவர்களை நம்பி இருக்கும் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள், இந்தியா உலகில் மிக அதிக அளவிலான பணியாளர்களைக் கொண்டிருந்தாலும், இந்தியா அவசரமாக ஏஐ கற்க வேண்டும். பயனுள்ள AI திறன் மேம்பாட்டை இந்தியா தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
AI தொழில்நுட்பம் 2030 ஆம் ஆண்டுக்குள் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு USD 3 டிரில்லியன் வரை பங்களிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதில் சுதாரித்து உடனே ஏஐ கற்றுக்கொள்பவர்களே முன்னேற்றம் அடைவார்கள். வேலையை தக்க வைத்துக்கொள்வார்கள். மற்றவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications