கெஜ்ரிவால் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்.. SIRல் நடந்த குளறுபடி? பரபரக்கும் டெல்லி
டெல்லி: டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், இதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
கடந்தாண்டு பீகார் மாநிலத்தில் முதலில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது டெல்லியிலும் எஸ்ஐஆர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ்
இதற்கிடையே டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் டெல்லி வாக்காளர் பட்டியலில் எப்படி இல்லாமல் போகும்?" என கேள்வி எழுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம்
இருப்பினும், இதை மறுக்கும் தேர்தல் ஆணையம், கடந்த முறை நடைபெற்ற எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலுடன் அவர்களின் பெயர்களை இணைக்க முடியாததால் நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், அவரது பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால், கீதா தேவி மற்றும் மகன் புல்கித் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் துறை இணையதளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது கெஜ்ரிவால் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லையாம். மாறாக சில காரணங்களுக்காக நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுறை என்றே தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது. கெஜ்ரிவால் மட்டுமின்றி கெஜ்ரிவால் டெல்லி தற்போதைய முதல்வர் ரேகா குப்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டெல்லி முதல்வர்
ஷாலிமார் பாக் தொகுதியில் வழங்கப்பட்ட அந்த நோட்டீசில், ஆவணங்களின்படி அவருக்கும் அவரது பெற்றோருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பது காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், ஷாலிமார் பாக் தொகுதி தேர்தல் பதிவு அதிகாரி அவரது விவரங்களை சரிபார்த்துவிட்டதாகவும், இறுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் இதுவரை 31,63,930 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களுக்காக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.5 லட்சம் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இல்லாதவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுமார் 47.5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன நடக்கும்?
நோட்டீஸ் பெற்றவர்கள் தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் பதில் அளிக்க வேண்டும். இதற்காக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பார்ம் 6 மூலம் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரலாம். இதற்கான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30 வரை பெறப்படுகின்றன.


Click it and Unblock the Notifications
