சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்! மதுபான கொள்கை வழக்கில் நீதிமன்ற காவல் ஆக.20 வரை நீடிப்பு
டெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தது. இருப்பினும் சிபிஐ வழக்கில் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்கிறது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், வரும் 20ம் தேதி வரை நீதிமன்றம் அவரது காவலை நீடித்திருக்கிறது.
கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.
ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதேபோல சிபிஐ-யும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை, அங்கேயே வைத்து அதிரடியாக கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் சிறையிலேயே இருக்கிறார். இவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நீதிமன்ற காவலர் வரும் 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் வரும் 12ம் தேதி மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications