Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடைபெறும் ஐபிசி .. பாரதீய நீதிச் சட்டத்தில் என்ன இருக்கு.. அதிர வைத்த அமித்ஷா.. அறிய வேண்டியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இனி இந்திய தண்டனை சட்டம் இல்லை.. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதீய நீதிச் சட்ட மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதீய சாட்சியங்கள் சட்டங்கள் தான் நாட்டில் அமல்படுத்தப்பட உள்ளது.. இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து பாரதீய நீதிச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்.

1860 ஆண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போதும் அமலில் இருக்கின்றன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் மசோதாக்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்க விரும்பியது .

 As Indian Penal Code Becomes Bharatiya Nyaya Sanhita: check the Major changes in BNS

பாரதீய நீதிச் சட்ட மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதீய சாட்சியங்கள் ( பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா )) சட்ட மசோதா என்று அவற்றுக்கு பெயர் சூட்டியது. இந்த மசோதாக்களை கடந்த ஆகஸ்ட் மாதம், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். பின்னர் அவை நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் மசோதாக்கள், கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்டன. நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை அமித்ஷா அண்மையில் தாக்கல் செய்தார்.

அப்போது அமித்ஷா பேசுகையில், விரிவான ஆலோசனைக்கு பின்னரே 3 குற்றவியல் மசோதாக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை தாக்கல் செய்வதற்கு முன்பு, ஒவ்வொரு கமா, முற்றுப்புள்ளியையும் நான் படித்து பார்த்தேன். இன்று வரை நாம் இங்கிலாந்து அரசு உருவாக்கிய குற்றவியல் சட்டங்களை நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.

ஆங்கிலேயர் உருவாக்கிய குற்றவியல் சட்டங்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்களை விட கருவூலத்தை கொள்ளையடித்தல், தண்டவாளத்தை பெயர்த்தல், மணிமகுடத்தை அவமதித்தல் போன்ற குற்றங்களுக்குத்தான் முன்னுரிமை அளித்திருக்கின்றன.

பழைய சட்டங்களில் பலாத்கார குற்றம், 375-376 பிரிவுகளில் இருந்தது. புதிய மசோதாவில், அது 63-வது பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. கொலை குற்றம், 302-வது பிரிவுக்கு பதிலாக 101-வது பிரிவில் உள்ளது. 'நாட்டுக்கு எதிரான குற்றம்' என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 'பயங்கரவாதம்' என்பதற்கு தெளிவான வரையறை அளிக்கப்பட்டிருக்கிறது.
கும்பலாக அடித்து கொல்லும் குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்கப்பட உள்ளது.

ஆங்கிலேயர் கால குற்றவியல் சட்டங்கள், காலனியாதிக்க மனப்பான்மை கொண்டவையாகும் தண்டிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டவை. நீதி வழங்குவதை நோக்கமாக கொள்ளவில்லை.ஆனால், இந்த புதிய குற்றவியல் மசோதாக்கள், இந்திய சிந்தனை அடிப்படையிலான குற்றவியல் நீதிபரிபாலனத்தை உருவாக்க வழிவகுக்கின்றன. முதல்முறையாக, மனிதாபிமான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவை காலனியாதிக்க மனப்பான்மையில் இருந்தும், அதன் அடையாளங்களில் இருந்தும் மக்களை நிச்சயம் விடுவிக்கும்.

காலதாமதமும், பணம் இல்லாததும் நீதி பெறுவதற்கு தடைக்கற்களாக இருக்கின்றன. அவற்றுக்கு இதில் தீர்வு கண்டுள்ளோம். இம்மசோதாக்கள் விரைவான நீதி பெற்று தரும். புகார் பெற்ற 3 நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டி இருக்கும். 14 நாட்களுக்குள் பூர்வாங்க விசாரணையை முடிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்தில் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது 180 நாட்களை தாண்டக்கூடாது. விசாரணை முடிவடையாவிட்டால், கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். நீதிபதிகள் 45 நாட்களுக்கு மேல் தீர்ப்பை ஒத்திவைக்க முடியாது. 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறத்தக்க குற்றங்களில் தடயவியல் ஆய்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், தன்னை விடுவிக்கக்கோரி மனுதாக்கல் செய்ய 7 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்படும். அந்த நாட்களில் நீதிபதி விசாரிக்க வேண்டும். அதிகபட்சம் 120 நாட்களுக்குள், வழக்கு விசாரணைக்கு வர வேண்டும். மேலும் குற்றம் செய்து 30 நாட்களுக்குள் குற்றத்தை ஒப்புக்கொண்டால், தண்டனை குறைவாக இருக்கும். விசாரணையின்போது, 30 நாட்களுக்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்வதை கட்டாயம் ஆக்கி இருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும், விசாரணை நடத்துவதற்கான சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது என்றார். பாரதீய நீதிச் சட்ட மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதீய சாட்சியங்கள் ஆகிய மூன்று மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் லோக்சபாவில் கடந்த 20ம் தேதி நிறைவேற்றப்பபட்டன.

இந்த சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவே தாக்கல் செய்த அன்று விரிவாக கூறியிருப்பார். எனினும் , இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள பாரதீய நீதிச் சட்ட மசோதா, பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதீய சாட்சியங்கள் சட்டங்களில் என்னென்ன பெரிய மற்றும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.

ஐபிசி என்ற வார்த்தையே பிஎன்எஸ் என்று இனி மாறுகிறது.

பாரதீய நீதிச் சட்டத்தில் பெரிய மாற்றங்கள்:

* பாரதீய நீதிச் சட்டத்தில் குழந்தை என்ற வரையறை அறிமுகப்படுத்தப்பட்டது

* 'பாலினம்' என்பதன் வரையறையில் திருநங்கைகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்

* மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகள் ஆவணத்தின் வரையறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

* 'அசையும் சொத்து' என்பதன் வரையறை விளக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு சொத்துக்கள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புதிய அத்தியாயம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது

* 'இன்கோட் குற்றங்கள்' என்ற அழைக்கப்படும் முயற்சி, தூண்டுதல் மற்றும் சதி பற்றி புதிய அத்தியாயம் பாரதீய நீதிச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

* திட்டமிட்டு தெளிவாக செய்யும் குற்றம், பயங்கரவாதச் செயல், திடீரென சிறிய அளவில் திட்டமிட்டு செய்யும் குற்றம், அடித்து விரட்டுதல், கும்பல் கொலை, குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல், ஆசைவார்த்தை கூறி பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், வழிபறி, இந்தியாவுக்கு வெளியே , தூண்டிவிடுதல், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள் போன்ற புதிய குற்றங்கள் பாரதீய நீதிச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் பொய்யான அல்லது போலியான செய்திகளை வெளியிடுதல் போன்றவை குறித்தும் பாரதீய நீதிச் சட்டத்தில் புதிதாக சட்டப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

* பாரதீய நீதிச் சட்டத்தில் தற்கொலை முயற்சி நீக்கப்பட்டுள்ளது.

* பாரதீய நீதிச் சட்டத்தில் பிச்சை எடுப்பது கடத்தலுக்கான சுரண்டல் வடிவமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

*கடுமையான காயம் பட்டவர்களின் வரையறையில், காயத்துடன் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை 20 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. தாக்குதல்களில் இனி 15 நாட்கள் சிகிச்சையில் இருந்தாலே கடுமையாக காயம் ஆகும்.

* ரூ.5,000க்கு குறைவான திருட்டுக்கு தண்டனையாக சமூக சேவை செய்வதாக தண்டனை வழங்கப்படும்.

* குற்றங்கள் எல்லாம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது, அதில் ஒரே மாதிரியான விதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது.

பாரதீய நீதிச் சட்டத்தில் சிறிய மாற்றங்கள்:

* ஒன்பது இடங்களில், 'பைத்தியக்காரன்', 'பைத்தியம்' மற்றும் 'முட்டாள்' போன்ற தொன்மையான சொற்றொடர்கள் அகற்றப்பட்டிருக்கிறது

* 'பிரிட்டிஷ் காலண்டர்', 'ராணி', 'பிரிட்டிஷ் இந்தியா,' மற்றும் 'சமாதானத்தின் நீதி' போன்ற காலனித்துவ எச்சங்களாக இருந்தவை சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

* 44 இடங்களில் 'கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்' என்பதற்குப் பதிலாக 'கோர்ட்' என்று மாற்றப்பட்டுள்ளது.

* பாரதீய நீதிச் சட்டம் முழுவதும் 'குழந்தை' என்ற சொற்களின் பயன்பாட்டில் சீரான தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது

* 12 இடங்களில், 'குறியீடு' என்பதற்குப் பதிலாக 'அர்த்தம்' என்றும், 'என்ன சொல்ல வருகிறது என்றால் என்பது மூன்று இடங்களில் 'அதாவது' என்றும் மாற்றப்பட்டுள்ளது.

* ஐபிசியில் 'நோக்கம் அல்லது காரணம் ' பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் புதிய சட்டத்தில், கருத்து சுதந்திரத்திற்கான பாதுகாப்பை வழங்கும் தேசத்துரோக வரையறையில் 'நோக்கம்' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

* புதிய மசோதாவில், வெறுப்பு, அவமதிப்பு போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, ஆயுதக் கிளர்ச்சி, அழிவு நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் போன்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கின்றன.

* புதிய மசோதாவில் இருந்து தேசத்துரோகம் என்ற வார்த்தை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

பாரதீய நீதிச் சட்டத்தில் குற்றங்கள் / தண்டனைகள் எப்படி மாறிவிட்டன?

* IPC இல் இருந்த பத்தொன்பது விதிகள் நீக்கப்பட்ட நிலையில் BNS இல் இருபது புதிய குற்றங்களைச் சேர்க்கப்பட்டுள்ளது.

* பாரதீய நீதிச் சட்டத்தில் 33 குற்றங்களில், சிறை தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது

* பாரதீய நீதிச் சட்டத்தில் 83 குற்றங்களில், அபராதத் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது

* பாரதீய நீதிச் சட்டத்தில் 23 குற்றங்களில், கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

* பாரதீய நீதிச் சட்டத்தில் ஆறு குற்றங்களில், 'சமூக சேவை' என்ற தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

* பாரதீய நீதிச் சட்டத்தில் கூட்டு பலாத்கார வழக்குகள் அனைத்திலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

* கும்பல் கொலைக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+