18 வயது பெண், பிரதமரை தேர்வு செய்யலாம்.. கணவரை முடிவு செய்ய முடியாதா? - கேள்வி எழுப்பும் ஓவைசி
டெல்லி: 18 வயது நிரம்பிய ஒரு பெண் எம்பிகளை தேர்ந்தெடுத்து அதன்மூலம் ஒரு நாட்டின் பிரதமரையே தேர்ந்தெடுக்கும் போது தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியாதா என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும் ஆண்களின் திருமண வயது இருபத்தி ஒன்றாகவும் உள்ளது. இந்த நிலையில் 18 வயது என்பது முடிவெடுக்க முடியாமல் திணறும் வயது எனவும் எனவே பெண்களின் திருமண வயதை 21 வயதாக உயர்த்த வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் அது விரைவில் சட்டமாக நிறைவேற்றபடவும் வாய்ப்பு உள்ளது.

பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு
இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் 18 வயதில் ஒரு பெண்ணால் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றால் ஏன் தனது கணவரை தேர்ந்தெடுக்க முடியாது என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கிண்டல் செய்துள்ளார்.

அரசின் முடிவு நகைப்புக்குரியது
இதுகுறித்து தனியார் செய்தி ஏஜென்சியிடம் பேசிய ஓவைசி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பின்னணியில் இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனவும், ஒரு இந்திய குடிமகன் 18 வயதில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், தொழில் தொடங்கலாம் , பிரதமர்களை தேர்ந்தெடுக்கலாம் மற்றும் எம்பி எம்எல்ஏக்களைதேர்ந்தெடுக்கலாம், ஆனால் வாழ்க்கைத்துணையை மட்டும்ம் தேர்ந்தெடுக்க முடியாது என்பது நகைப்புக்குரியது என்றும், ஆண்களுக்கான 21 வயது வரம்பையே 18 வயதாக குறைக்க வேண்டும் என தான் கருதுவதாகக் கூறினார்.

பெண்களின் பங்களிப்பு
இந்த அரசாங்கம் பெண்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்யவில்லை என கூறிய அவர் , இந்தியாவில் குழந்தைத் திருமணம் குறைந்திருப்பது குற்றவியல் சட்டத்தால் அல்ல என்றும் கல்வியும் பொருளாதார முன்னேற்றம் தான் காரணம் என கூறினார். அப்படியிருந்தும் 12 மில்லியன் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுவதாக அரசின் தரவுகள் கூறுவதாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனவும் 2005இல் 26 சதவீதமாக இருந்த பெண்களின் பங்களிப்பு , 2020ல் 16 சதவீதமாக குறைந்துள்ளது சுட்டிக்காட்டினார்.

பெண்களின் தனிப்பட்ட உரிமை
தரவுகள் பாதுகாப்பு மசோதாவில் தரவுகளை பகிர உங்களுக்கு உரிமை உள்ளது ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பது என்ன வகையான என கேள்வி எழுப்பியுள்ள ஓவைசி, அதனால்தான் இது ஒரு தவறான நடவடிக்கை என தாம் உணர்வதாகவும் தனது பார்வையில் இருபத்தொரு வயதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் , யாரை திருமணம் செய்து கொள்ளலாம் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதை தேர்வு செய்வது பெண்களின் தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் பல மாநிலங்களில் 14 வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், பிரிட்டன் மற்றும் கனடாவில் 16 வயதில் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது எனவும் அசாதுதீன் ஓவைசி கூறினார்.












Click it and Unblock the Notifications