"ராகுல் காந்தி தான் எங்க பிரதமர் வேட்பாளர்.." பற்ற வைத்த அசோக் கெலாட்! அப்போ "இந்தியா" முடிவு என்ன
டெல்லி: பிரதமர் பதவி குறித்துத் தேர்தல் பிறகு முடிவெடுப்போம் என்று "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் கூறி வரும் நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று கூறி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இருப்பினும், கடந்த தேர்தல்களில் இதுபோல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வரவில்லை.

இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது. மொத்தம் 25+ எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டு "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கூட்டணி தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ளும் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பற்ற வைத்த கெலாட்: இதனிடையே ராகுல் காந்தியைக் காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளராக முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். "இந்தியா" கூட்டணிக் கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் கூட, காங்கிரஸ் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளது என்று கெலாட் தெரிவித்தார். பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கெலாட் அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியில் அவர் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தியக் கூட்டணியின் அவசியம் குறித்துப் பேசிய அவர், "ஒவ்வொரு தேர்தலிலும் உள்ளூர் பிரச்சினைகள் முக்கியமானதாக இருக்கிறது. இருப்பினும் சமீப காலமாக நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்து கட்சிகளுக்கும் மிகப் பெரிய அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இந்த அழுத்தத்தை வேறு யாரும் உருவாக்கவில்லை.. மாற்றத்தை விரும்பும் மக்கள் தான் இந்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ராகுல் காந்தி: இதன் விளைவாக அனைத்து கட்சிகளும் இணைந்து கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். "இந்தியா" கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்களின் சொந்த கருத்துகள் இருக்கலாம். ஆனால், இதுதான் காங்கிரஸ் கட்சியின் முடிவு..
பிரதமர் நரேந்திர மோடி ஆணவம் கொண்டவராக இருக்கக் கூடாது.. கடந்த 2014இல் 31% வாக்குகளை மட்டுமே பிரதமர் மோடி பெற்றிருந்தார் என்பதை நாம் மறக்கக் கூடாது.. மீதமுள்ள 69% வாக்குகள் அவருக்கு எதிராகவே இருந்துள்ளது. கடந்த மாதம் பெங்களூரில் நடந்த "இந்தியா" கூட்டணி மீட்டிங்கை பார்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
வாக்குகள் சரியும்: நிலைமை இப்படி இருக்க அடுத்து வரும் தேர்தலில் அவர்கள் 50% வாக்குகளைப் பெறுவோம் என்கிறார்கள். நான் சொல்கிறேன்.. பிரதமர் மோடியால் ஒருபோதும் அதைச் சாதிக்க முடியாது. மோடி புகழின் உச்சத்தில் இருந்தபோதே அவரால் இதைச் செய்ய முடியவில்லை. அவரது வாக்கு சதவிகிதம் நிச்சயம் குறையும்... 2024 தேர்தல் முடிவுகள் தான் யார் பிரதமர் என்பதைத் தீர்மானிக்கும்.
காங்கிரஸ் செய்த சில தவறுகளால் தான் கடந்த 2014இல் பிரதமர் மோடி பிரதமரானார்.. அதேநேரம் வரும் காலத்தில் என்ன நடக்கும் என்பதை நாம் சொல்ல முடியாது. ஜனநாயகத்தில் எதிர்காலம் குறித்துக் கணிப்புகள் செய்வது சாத்தியமில்லை.. இந்த முடிவை மக்கள் எடுக்க வேண்டும், பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்தார், ஆனால் அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்பது மக்களுக்குத் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
சந்திரயான்- 3: தொடர்ந்து சந்திரயான் 3 குறித்தும் அதன் வெற்றி குறித்தும் பேசிய அவர், "சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியே காரணம்.. சந்திரயான்-3 வெற்றியில் நேருவின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.. விண்வெளி துறையில் நாம் இப்போது படைத்துள்ள சாதனைகளில் என்பது இந்திரா காந்தி மற்றும் நேருவின் உழைப்பின் வெளிப்பாடு தான்.
விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் ஆலோசனையை நேரு கேட்டதால்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிறுவப்பட்டது.. நேரு காலத்தில் விண்வெளி மையத்தின் பெயர் வேறாக இருந்தது.. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி அதை இஸ்ரோ என மாற்றினார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications