இந்தியா இல்லை பாரத்! அதிரடியாக மாற்றிய பாஜக முதல்வர்.. “மோடிகிட்ட போய் சொல்லுங்க”- காங்கிரஸ் பதிலடி!
டெல்லி: பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பயோவில் இருந்து இந்தியா என்பதனை நீக்கிவிட்டு பாரத் என வைத்துள்ளார் அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா.
2 நாட்களாக பெங்களுரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு I.N.D.I.A. (இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என அசாம் மாநில பாஜக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.
ஏற்கெனவே எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்று இருந்தது. இந்தச் சூழலில் 2ஆவது கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
இந்தியா கூட்டணி: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் இறுதி செய்யப்பட்டது. அதன்படி இந்தக் கூட்டணிக்கு I-N-D-I-A என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தக் கூட்டணிக்கு Indian National Developmental Inclusive Alliance என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில், இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பேசினர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்திக் கொடுத்ததற்குக் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்த மம்தா, இந்தியாவை எதிர்கொள்ள பாஜகவால் முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியா இல்லை, பாரத்: இந்த நிலையில் தனது ட்விட்டர் பயோவில் இந்தியா என்று இருந்ததை பாரத் என்று மாற்றியுள்ளார் அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மார். மேலும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை விமர்சித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ட்வீட்டும் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், "நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயரிட்டனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட நாம் பாடுபட வேண்டும். நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பதிலடி: ஹிமந்த பிஸ்வா சர்மாவின் கருத்துகளுக்குப் பதிலளித்த காங்கிரஸ், 'டிஜிட்டல் இந்தியா', 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஸ்கில் இந்தியா' போன்ற பல அரசு திட்டங்களுக்கு இந்தியா என்ற பெயரைச் சூட்டிய பிரதமர் நரேந்திர மோடியிடம், அசாம் முதல்வர் தனது கருத்துக்களை தெரிவிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications