ஐடி கார்டை காட்டிய பின்னரும்.. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்! டெல்லி போலீஸ் மீது சரமாரி விமர்சனம்
டெல்லி: நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. போலீசாரின் நடவடிக்கைக்கு பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்ற போது, போலீசாரிடம் தங்களது ஐடி கார்டை காண்பித்த பின்னரும் போலீசார் தாக்கியிருப்பதாக தி வயர் செய்தியை வெளியிட்டிருக்கிறது.

நியூஸ் லாண்டரி செய்தி நிறுவனத்தின் நிருபர்களான அஷ்வினி குமார் சிங், ஆஸ்தா சவ்யாசாச்சி, அன்மோல் பிரீதம் மற்றும் ஸ்க்ரோல் இணையதளத்தின் நிருபர் ஆயுஷ் திவாரி ஆகியோர் காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும், இவர்களிடமிருந்து செல்போன்கள் மற்றும் செய்தி சேகரிக்கும் உபகரணங்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்தனர் என்று தி வயர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட், நவபாரத் டைம்ஸ் மற்றும் ரிப்போர்ட்டர் டிவி ஆகிய ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். காவல்துறையினரால் தற்காலிகமாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். முன்னதாக கடந்த 2-3 தினங்களுக்கு முன்னதாக ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தின்போது பணியில் இருந்த பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் ரீதியான அச்சுறத்தல்களும் தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
போராட்டம் நடக்கும் இடத்தில் பெண் காவலர்கள் இல்லாததை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் ஒருவரை உதவி காவல் ஆணையர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ), இந்திய எடிட்டர்ஸ் கில்ட், தேசிய பத்திரிகையாளர் கூட்டணி (NAJ) உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பத்திரிகையாளர்கள் உரிமைகள் நசுக்கப்படும் இந்த சூழல், இந்தியாவில் அவசரநிலை காலத்தை விம மோசமான பாசிச நிலையை நோக்கி செல்வதை காட்டுவதாக விமர்சித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications
