ம.பியில் ரேசில் முந்தும் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான்..சத்தீஷ்கரில் யார்? என்டிடிவி கருத்து கணிப்பு
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் ஆளும் கட்சியா அல்லது எதிர்க்கட்சியா யாருக்கு ஆதரவு அதிகம் உள்ளது என்பது குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகளை NDTV-CSDS Lokniti வெளியிட்டுள்ளது. இதன் விவரங்களை பார்க்கலாம்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். கடந்த 2018 ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. மத்திய பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் வரும் 17 ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 116 வெல்வது அவசியம். மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. எனினும், சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது. மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாஜக இடையே தான் நேரடியாக போட்டி உள்ளது.
யாருக்கு அதிக ஆதரவு?: இதனால் வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏற காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பாஜக-காங்கிரஸ் இடையே பலமான போட்டி நிலவும் என்றே பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு அதிக ஆதரவு உள்ளதா? அல்லது கமல்நாத்திற்கு அதிக ஆதரவு உள்ளதா? என்பது குறித்து சர்வே நடத்தி அதன் முடிவுகளை NDTV-CSDS Lokniti Poll வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானுக்கே கூடுதல் ஆதரவு உள்ளது காங்கிரசின் கமல்நாத்திற்கு 34 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சிவராஜ் சிங் சவுகானுக்கு 36 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சத்தீஷ்கரில் எப்படி?: 6 சதவீதம் பேர் கருத்து கூற மறுத்து விட்டனர். 13 சதவீதம் பேர் இரண்டு பேரின் செயல்பாடுமே திருபதி அளிக்கும் விதமாகவே இருந்ததாக கூறியுள்ளார். 11 பேர் சதவீதம் பேர் இரண்டு பேரது செயல்பாடும் திருப்தி இல்லை எனக் கூறியுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மற்றொரு மாநிலமான சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஷ்கரை பொறுத்தவரை முதல்வர் பூபேஷ் பகேலின் செல்வாக்கு சரியவில்லை என்று NDTV-CSDS Lokniti survey கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பகலுக்கு 39 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜகவின் ராமன்சிங்கிற்கு 24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என்று என்.டி.டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications