இனி கொரோனா பயம் தேவையில்லை.. ‘அப்படியே’ சாப்பிடலாம்.. பானிபூரி வெறியர்களுக்கு ஒரு குட்நியூஸ்!
தானியங்கி பானி பூரி இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லி: கொரோனா பரவல் பற்றிய பயம் இல்லாமல் பானி பூரி சாப்பிடும் வகையில் புதிய இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான நொறுக்கு தீனிகளின் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டது பானி பூரி. அதிலும் தமிழ்நாட்டில் தெருவுக்கு நாலு பானிபூரி கடைகளை கொரோனா ஊரடங்குக்கு முன்பு பார்த்திருக்க முடியும்.
ஊரடங்கு உத்தரவு முதலில் அமலுக்கு வந்த போது, பானி பூரி சாப்பிடாமல் எப்படி இருக்கப் போகிறோம் என்பது தான் பலரது கவலையாக இருந்தது. அது பற்றிய பல மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாக உலா வந்தன. முதலில் காமெடியாக இருந்தாலும், நாளாக நாளாக பானிபூரி சாப்பிடாமல் பலரும் தவித்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டிலேயே தயாரிப்பு
இதனால் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பானிபூரி செய்ய தொடங்கிவிட்டார்கள் நம் மக்கள். இருந்தாலும் கடையில் வாங்கி சாப்பிடும் சுவை வீட்டில் செய்யப்பட்ட பானிபூரிகளில் கிடைக்கவில்லை என்பதை பலர் வெளிப்படையாக சொல்வதை சமூகவலைதளப் பதிவுகளில் பார்க்க முடிந்தது.

தீராத பயம்
இதற்காகவே ஊரடங்கு முடிந்த பிறகு முதல் வேலையாக பானிபூரி வாங்கி சாப்பிட வேண்டும் என மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. கொரோனா பயத்தினால் முன்பு போல் ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் பானிபூரியை வாங்கி சாப்பிடுவதற்கு பலருக்கும் தயக்கம் இருக்கவே செய்கிறது.

பானிபூரி இயந்திரம்
அப்படிப்பட்ட தீவிர பானிபூரி வெறியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது தானியங்கி பானிபூரி இயந்திரம். இது தான் தற்போது சமூகவலைதளங்களின் புதிய வைரல். இந்த இயந்திரத்தை கொண்டு கொரோனா பற்றிய பயமே இல்லாமல் இனி பானி பூரி சாப்பிடலாம்.

அப்படியே சாப்பிடலாம்
அந்த இயந்திரத்தில் ஒரு 20 ரூபாய் நோட்டை உள்ளே சொருகினால் போதும், அதுவே பானி பூரிகளை வரிசையாக வெளியே தள்ளும். கன்வேயர் பெல்ட்டில் ஒவ்வொன்றாக வரும் ரெடிமேட் பானி பூரிகளை எடுத்து அப்படியே லபக்கென வாயில் போட்டு சாப்பிடலாம். எனவே நமக்கு கொரோனா பயம் அவசியமே இல்லை.












Click it and Unblock the Notifications