கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல்
டெல்லி: நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவில் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, ஓட்டல்களில் தற்போது வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு காலக்கெடு விடுக்கப்பட்டிருப்பதால், பெரிய நெருக்கடி ஏற்படவில்லை.

மண்ணெண்ணெய் அடுப்புகள்
இப்படி இருக்கையில்தான் நிலைமையை சமாளிக்க மண்ணெண்ணெய் விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக அல்லாமல், ஒரு பேக்-அப் பிளானாக இது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் மண்ணெண்ணெய் அடுப்புகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே, அந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தற்போது மண்ணெண்ணெய் விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில், மண்ணெண்ணெய்யை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட அனுபவம் இருக்கிறது. எனவே, மீண்டும் மக்களிடத்தில் இதை கொண்டு போய் சேர்ப்பதில் பெரிய சிரமம் இருக்காது.
ஏன் எல்பிஜியை உருவாக்க முடியாது?
கச்சா எண்ணெயிலிருந்துதான் எல்பிஜி உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல்தான் முதன்மை தேவை. எனவே, இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜியை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை நாம் பெரியதாக இங்கு கட்டமைக்கவில்லை. சரி இந்த நெருக்கடி காலத்தில் கட்டமைக்கலாம் என்று யோசித்தாலும், அது லேசுபட்ட காரியம் கிடையாது. எனவேதான் எல்பிஜி விஷயத்தில் நாம் இறக்குமதியை நம்பியிருக்கிறோம்.
கச்சா எண்ணெயும் எல்பிஜியும்
தற்போது கச்சா எண்ணெய் வரத்தும் குறைந்திருப்பதால் எல்பிஜி நெருக்கடி உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கச்சா எண்ணெய் நம்மிடம் குறிப்பிட்ட அளவில் இருப்பு இருக்கிறது. பாறையை குடைந்து கச்சா எண்ணெயை நாம் சேமித்து வைத்திருக்கிறோம். இதை சுத்திகரிக்கும்போது பெட்ரோல், டீசல் கிடைக்கும். எல்லா வகையான கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும்போதும் இது கிடைக்கும். இத்துடன் பெரும்பான்மையான எண்ணெயிலிருந்து மண்ணெண்ணெய் கிடைக்கும்.
ஆனால், எல்பிஜி அப்படி கிடையாது. எல்லா கச்சா எண்ணெய்யிலிருந்தும் தாராளமான அளவில் எல்பிஜி கிடைக்காது. குறிப்பிட்ட வகை எண்ணெய்யிலிருந்து மட்டும்தான் எல்பிஜி கிடைக்கும். மறுபுறம், நம் நாட்டில் எல்பிஜியை சேமித்து வைக்க இடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications