பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக இன்று போராட்டம்.. களத்தில் இறங்கிய கரப்பான் பூச்சி ஜனதா! பின்னணி
டெல்லி: பார் கவுன்சில் தலைவராக உள்ள மனன் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. கரப்பான் பூச்சி கட்சியின் லீகல் கரப்பான்கள், பார் கவுன்சில் தலைவரின் ராஜினாமாவை வலியுறுத்தி இன்று காலை 10 மணிக்கு பார் கவுன்சில் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் அறிவித்துள்ளார்.
NALSAR பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான சர்ச்சையில் மனன் மிஸ்ராவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தை அறிவித்து இருப்பதாகவும், அமைதியான இந்த போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார். மேலும், மும்பை உயர் நீதிமன்ற பார் அசோசியஷனும் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

பார் கவுன்சில் தலைவர் ராஜினாமா செய்யனும்
நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. மாணவர்களின் போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்தது. இளைஞர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் விரைவில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்று கரப்பான் பூச்சி ஜனதா அறிவித்து வரும் நிலையில், இன்று பார் கவுன்சில் தலைவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட இருப்பதாக அறிவித்துள்ளது.
பார் கவுன்சில் தலைவருக்கு எதிர்ப்பு ஏன்?
ஐதரபாத்தில் உள்ள பிரபலமான நால்சால் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிக்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அழைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 450 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், தலைமை நீதிபதி சூர்ய காந்தை அழைப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருந்தனர்.
ஜந்தர் மந்தரில் மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தின் போது, மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர்கள் வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்க முயன்றபோது, வீடியோக்களை பார்க்க ஆர்வம் இல்லை என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி பங்கேற்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையே, தலைமை நீதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நல்சார் பல்கலையிலிருந்து பட்டம் பெறும் யாரையும், மாநில பார் கவுன்சில்கள் பதிவு செய்யக்கூடாது என்று, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மாநில பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டார்.
மன்னிப்பு ஏற்கும் படி இல்லை
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பார் கவுன்சிலின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தனது சுற்றறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவரது மன்னிப்பு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை எனவும் அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
