ஜி20.. டெல்லியில் குடிசை பகுதியை திரைக்கட்டி மறைத்த மத்திய அரசு! கொதித்த மக்கள்! காங்கிரஸ் வீடியோ
டெல்லி: டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் உலக தலைவர்களின் கண்களில் படாமல் இருக்க டெல்லியில் உள்ள குடிசை பகுதிகளை சுற்றி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திரைக்கட்டி இருப்பதாகவும், இதனால் மக்கள் கொதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஜி20 அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்பட மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த மாநாடு என்பது ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடுகளின் தலைமையில் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது.

அதன்படி டெல்லியில் இன்று ஜி20 மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. இந்த மாநாடு என்பது நாளை வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசா உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தான் டெல்லியில் ஏழை மக்கள் வசிக்கும் குடிசை பகுதியை உலக தலைவர்களின் கண்களில் படாமல் மறைக்க மத்திய அரசு திரைச்சீலை கொண்டு மூடியுள்ளதாகவும், இதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், ‛‛ஜி 20 மாநாட்டுக்கு முன்பு மோடி அரசாங்கம் தனது தோல்வியை மறைக்க ஏழைகளின் வீடுகளை திரைச்சீலைகளால் மூடியுள்ளது. ஏனென்றால் இந்த அரசன் ஏழைகளை வெறுக்கிறார்'' என குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் அந்த பதிவில் 2.44 நிமிடங்களுக்கான வீடியோ ஒன்றையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ என்பது தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான கூலி தொழிலாளர்கள் தகர வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த வீடியோவில், ‛‛ஜி20 மாநாட்டுக்கு 10 நாட்களுக்கு முன்பு பச்சை நிறத்திலான திரைச்சீலைகள் கொண்டு இந்த குடிசை பகுதிகளை சுற்றி கவர் செய்யப்பட்டது'' என கூறப்பட்டுள்ளது.
மேலும் வீடியோவில் அஜர் பால் என்பவர் பேசுகிறார். அவர் கூறுகையில், ‛‛நம் நாட்டுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வருகின்றனர். அவர்களின் கண்களில் படாமல் இருக்க குடிசை பகுதிகளை சுற்றி திரைச்சீலைகளை கட்டி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தலைநகரின் நிலை இப்படி இருக்கிறது என்பதை பார்க்க விடாமல் தடுப்பது தான். நான் வேலை பார்த்தேன். இப்போது எனக்கு வேலை எதுவும் இல்லை. நாங்கள் தற்போது தற்காலிகமாக இங்கு வீடு கட்டி இருக்கிறோம். இது நிரந்தர வீடாக மாற்றித்தந்திருக்க வேண்டும். இதனை செய்திருந்தால் திரைப்போட்டு மூட வேண்டிய அவசியம் வந்திருக்காது. வேண்டும். '' என்றார்.

நயிம் என்பவர் கூறுகையில், ‛‛ஜி20 மாநாட்டையொட்டி இப்படி மூடுவதாக போலீசார் தெரிவித்தனர்'' என்றார். அதேபோல் சோனியா என்பவர் கூறுகையில், ‛‛குடிசை பகுதிகளை மூடி வைத்துவிட்டு ரோட்டை மட்டும் அவர்களுக்கு காட்ட நினைக்கின்றனர். இதன்மூலம் மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. இப்போது மூச்சுமுட்டுகிறது'' என்றார்.
அதேபோல் ராணி என்பவர் கூறுகையில், ‛‛நாங்கள் விலங்குகள் அல்ல. நாங்களும் மனிதர்கள் தான். நாங்கள் குடிசை பகுதியில் தான் வசிக்கிறோம். எங்களுக்கு என்று எதுவும் கிடைக்காத நிலை உள்ளது. நாங்கள் வெளியே சென்றாலும் அவர்கள் தவறாக பேசுகின்றனர். நாங்கள் ரோட்டில் வசிக்கிறோம். எங்களின் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. டிராபிக் போலீசார் அடாவடியாக நடக்கின்றனர். நாங்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?. அரசு எங்களை பூச்சி போல் நினைக்கிறது'' என ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications