மீண்டும் பழைய பயம்.. குஜராத்தை விட்டே வெளியேறிய பில்கிஸ் பானோ! 2 குற்றவாளிகளுக்கு ஜாமீனால் பரபரப்பு
டெல்லி: 2002 குஜராத் கலவரத்தின்போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானோ, தனது வழக்கில் தண்டனை பெற்ற 2 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் கடும் அச்சமடைந்துள்ளார். இதையடுத்து பில்கிஸ் பானோவும் அவரது குடும்பத்தினரும் குஜராத்தை விட்டே வெளியேறியுள்ளதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
2002 குஜராத் கலவரத்தின்போது பல வன்முறை சம்பவங்கள் நடந்தது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பில்கிஸ் பானோ. அப்போது கர்ப்பிணியாக இருந்த அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது 3 வயது மகள், அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஜாமீன்
இதற்கிடையே குற்றவாளிகள் இருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தண்டனை பெற்ற பிபின் சந்திர ஜோஷி, பிரதீப் மோர்தியா ஆகிய இருவரின் ஆயுள் தண்டனையையும் நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கியது. 2022ஆம் ஆண்டு குஜராத் அரசு இந்த 11 குற்றவாளிகளுக்கும் தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்த நிலையில், 2024 ஜனவரியில் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் அவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்பினர். இந்த சூழலில் தான் நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
குஜராத்தை விட்டே கிளம்பினர்
பில்கிஸ் பானோவின் குடும்பத்தினர் குஜராத்தில் வசித்து வந்த நிலையில், அக்டோபர் 28ஆம் தேதி 2 குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 2 அவர்கள் குஜராத்தை விட்டே வெளியேறியுள்ளனர்.
தஹோத் மாவட்டம் தேவ்கர் பாரியா பகுதியில் வசிக்கும் பில்கிஸ் பானோவின் மாமா ரஸாக் மன்சூரி இது குறித்து கூறுகையில், "பில்கிஸ் பானோ குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறித்து யாரும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. அவர்களது வழக்கறிஞருக்குக்கூட தெரியவில்லை. சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இதை அறிந்துகொண்டனர்" என்றார்.
சிறை
குற்றவாளிகள் பரோலில் வெளியே வரும்போதெல்லாம் கிராமத்திற்கு அடிக்கடி திரும்பி வருவதாகவும், சில நேரங்களில் ஒரு மாதம் வரை அங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அவர்கள் கோத்ரா மற்றும் தஹோத் சிறைகளில் உள்ளனர். ஒரு குற்றவாளி மட்டும் ஒரு மாத பரோலில் வெளியே இருப்பதாகவும் கூறினார். குற்றவாளிகளுக்கு இப்படி ஜாமீன் கிடைக்கும்போது, அவர்கள் எதையும் செய்யக்கூடியவர்கள் என்ற அச்சம் பில்கிஸ் பானோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானோ வேதனை
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நேற்றைய தினம் பில்கிஸ் பானோ தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், "வலி, அதிர்ச்சி, நம்ப முடியாத நிலை ஆகியவற்றால் மீண்டும் கண்ணீர் வருகிறது. என்னை அழைத்து விசாரிக்காமலும், என் கருத்தைக் கேட்காமலும் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. பத்திரிகை செய்திகளின் மூலமாகவே இதை அறிந்தேன்.
19 வயது இளம் பெண்ணாக இருந்தபோது எனது குழந்தை, குடும்பம், வீடு, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கை என அனைத்தையும் இழந்துவிட்டேன். கடந்த 24 ஆண்டுகளாக எனக்கும், பெண்களுக்கும் நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறேன்.
நம்பிக்கை போச்சு
நான் நீதிமன்றம் நீதிமன்றமாகச் சென்று போராடினேன். ஒவ்வொரு முறையும் நீதி கிடைத்தபோது, நீதியின் மீதான நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்புடன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பினேன். அமைதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இன்று, நான் போராடி பெற்ற நீதியை மீண்டும் இழப்பதாக உணர்கிறேன். பழைய பயங்கள் மீண்டும் வருகின்றன. எனக்கும் எனது குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் மீண்டும் பயமாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications
