நிரம்பி வழியும் பாஜக கஜானா.. ரூ. 1000 கோடி வருமானம்.. காங். கல்லாப் பெட்டியில் எவ்வளவு இருக்கோ!
Recommended Video

டெல்லி: 2017-18ம் ஆண்டில் தமது கட்சிக்கு ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஜனநாயக ரீதியான சீர்திருத்த சிந்தனை சங்கமான ஏடிஆர் என்ற சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல முக்கிய புள்ளி விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, 2017-18ம் ஆண்டில் பாஜகவுக்கு நன்கொடையாக கிடைத்த வருவாய் மட்டும் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக கூறியுள்ளது. சரியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஆயிரத்து 27 கோடியே 33 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தை விட குறைவு
இந்த தொகையானது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 7 கோடி குறைவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கட்சிக்கு கிடைத்த நன்கொடை எவ்வளவு என்பதை பாஜகவும் அறிவித்துள்ளது.

நன்கொடை ரூ. 1000 கோடி
அதன்படி 2017-18ம் ஆண்டில் நன்கொடையாக கிடைத்த வருவாய் மட்டும் ஆயிரம் கோடி என்று பாஜக அறிவித்துள்ளது. அடுத்தபடியாக, சிபிஐ(எம்) கட்சி பெற்ற நன்கொடை 104 கோடியே 84 லட்சம் என்று ஏடிஆர் சங்கம் கூறியுள்ளது.

பகுஜன், தேசியவாத காங்கிரஸ்
அவர்களை தொடர்ந்து, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 51 கோடியே 69 லட்சம் நன்கொடையாக வரப்பெற்றுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 கோடியே 15 லட்சமும் நன்கொடையாக பெற்றுள்ளது.

திரிணாமூல் நன்கொடை
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 5 கோடியும், சிபிஐக்கு ஒன்றரை கோடியும் நன்கொடையாக கிடைத்துள்ளது. கட்சிகளின் வரவு பட்டியல் இப்படி இருக்க, ஆண்டு செலவு கணக்குகளையும் அந்தந்த கட்சிகள் வெளியிட்டுள்ளன.

செலவுக் கணக்கு
அதன்படி, இதுவரை 758 கோடியே 47 லட்சம் செலவு செய்துள்ளதாக பாஜகவும், சிபிஐ(எம்) 83 கோடியே 48 லட்சத்தை செலவழித்துள்ளதாக அறிவித்துள்ளன. ஆனால் சரத்பவார் கட்சியோ கிடைத்த வருமானத்தை விட 69 லட்சத்தை கூடுதலாக செலவழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காங். கல்லாப் பெட்டி
பாஜக, பகுஜன்சமாஜ், இடதுசாரிகள் அனைத்து கட்சிகளின் வரவு செலவுகள் மக்களின் பார்வைக்கு வந்துவிட, காங்கிரசின் நிலைதான் என்னவென்று தெரியாமல் உள்ளது. 2016-17ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு 225 கோடியே 36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் இதுவரை வரவு செலவு விவரங்களை அக்கட்சி தாக்கல் செய்யாததால் முழு விவரங்கள் தெரியவில்லை. ஒட்டு மொத்தத்தில் வரவிலும் சரி... செலவிலும் சரி பாஜக தான் டாப்பில் உள்ளது.












Click it and Unblock the Notifications