பூபேஷ் பாகேலுக்கு எதிராக அவரது மருமகனையே களமிறக்கும் பாஜக.. சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்க வியூகம்!
டெல்லி: சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு எதிராக லோக்சபா எம்.பி விஜய் பாகேலை களமிறங்கியுள்ளது பாஜக. இவர் பூபேஷ் பாகலின் நெருங்கிய உறவினர் ஆவார்.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராஜஸ்தான், மிஸோரம், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டபேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. 5 மாநிலங்களில், மத்திய பிரதேசத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், மத்திய பிரதேசத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் குறித்து பாஜகவின் மத்திய தேர்தல் குழு நேற்று முன்தினம் கூடி ஆலோசித்தது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரிக்க மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் ஒரு குழுவும், முன்னாள் எம்.பி நாராயண் லால் தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே இடம்பெறவில்லை. எனினும் மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தை வசுந்தரா ராஜே தலைமையேற்று நடத்துவார் என்று கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த 14 பேருக்கு மீண்டும் பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் சோங்கர், சோன்காச் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ம.பி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் தலா 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல், பதான் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் இதே தொகுதியில் மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அந்த தொகுதியில் பாஜக சார்பில் லோக்சபா எம்.பி விஜய் பாகேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் பூபேஷ் பாகேலின் நெருங்கிய உறவினர் ஆவார். அதாவது, விஜய் பாகேலுக்கு, பூபேஷ் பாகேல் மாமா உறவுமுறை.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் 1993 முதல் ஐந்து முறை படான் தொகுயில் இருந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2008 சட்டமன்றத் தேர்தலில் பூபேஷ் பாகேலை அவரது மருமகனான விஜய் பாகேல் தோற்கடித்தார். அதைத் தொடர்ந்து, 2013ல் விஜய் பாகேலை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டினார் பூபேஷ் பாகேல். இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கடைசியாக நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுத்த நிலையில், எதிர்வரும் 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அதில் 2 மாநிலங்கள் காங்கிரஸ் வசம் இருப்பதால், அங்கு காங். ஆட்சியை அகற்றும் நோக்கில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் காரணமாகவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ம.பி மற்றும் சத்தீஸ்கரில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications