காலையிலேயே “ஷாக்”.. சோகத்தில் மூழ்கிய பாஜக! உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் ஹர்த்வார் துபே காலமானார்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஹர்த்வார் துபே உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லியில் காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஹர்வார் துபே. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த இவர், உத்தரப்பிரதேச மாநில நிதி அமைச்சராகவும், 2 முறை உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து இருக்கிறார். இந்த நிலையில் 74 வயதான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை மோசமான காரணத்தால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹர்த்வார் துபே உயிரிழந்த தகவலை பிரன்ஷு துபே உறுதிபடுத்தி உள்ளார். உரிய நடைமுறைகள் முடிந்த பிறகு ஹர்த்வார் துபேவின் உடலை இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச பாஜகவின் மூத்த தலைவராக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த ஹர்த்வார் துபேவின் மரணம் பாஜகவினருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினரும், உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சருமான ஹர்த்வா துபேவின் மரணம் மிகுந்த வேதனை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த புண்ணிய ஆத்மாவுக்கு பகவான் ஸ்ரீராமர் தனது புனித பாதங்களில் இடம் தந்து, இந்த பெரும் துயரத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி," என்று பதிவிட்டு உள்ளார்.
அதேபோல் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியும் துபேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "மாநிலங்களவை எம்பி ஹர்த்வார் துபே மறைவு செய்தி அறிந்து சோகமடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இதயம் கணிந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications