ரெடியாகிறது பாஜக.. அடுத்தடுத்து தேர்தல்.. நாளை கூடுகிறது தேசிய செயற்குழு கூட்டம்.. செம எதிர்பார்ப்பு
நாளை கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
டெல்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது... பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டா பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழு கூட்டம் இதுவாகும்.
சமீபத்தில் அசாம், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம், மேகாலயா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகள், 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30-ம் தேதி நடந்தது.
இதில் பெருமளவு காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்ற நிலையில், பாஜகவுக்கு இந்த தோல்வி மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதுவே தற்போது சவாலாகவும் அக்கட்சிக்கு அமைந்துள்ளது.

அதிர்ச்சி
வழக்கமாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது இயல்பான நடைமுறை.. ஆனால், பாஜக மத்தியில் வலுவாக இருந்தும்கூட, இப்படி ஒரு அதிர்ச்சி தோல்வி என்பது பின்னடைவாகவே கருதப்படுகிறது.. இதற்கு என்ன காரணம்? காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுவிட்டதா? அல்லது பாஜக அதிருப்திகளை சம்பாதித்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எனினும் தன்மீதுள்ள குறைகளை களைந்து அடுத்த தேர்தலை முனைப்புடன் எதிர்கொள்ள பாஜக தயாராகிவிட்டது..

நிர்ப்பந்தம்
இன்னும் சில மாதங்களில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தோதல் நடக்க போகிறது.. இந்த 5 மாநிலங்களிலுமே வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது.. காணொலி மூலம் இந்த கூட்டம் நடக்க போகிறது.. அனைத்து மாநில பாஜக தலைவா்கள், மாநில பொது செயலாளர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் என அனைவருமே இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.. அவரவர் கட்சி ஆபீசில் இருந்தே, காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போகிறார்கள்.

பிரதமர் மோடி
அடுத்த ஆண்டு துவக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.. அதுபோலவே, அடுத்த ஆண்டு இறுதியில் இமாசல பிரதேசத்தில் தேர்தல் நடக்க போகிறது.. எனவே, இந்த கூட்டத்தில் நடக்க போகும் தேர்தல்கள் மற்றும் நிகழ்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா துவக்க உரையாற்ற உள்ளார்.. பிரதமர் மோடி நிறைவுரையாற்ற இருக்கிறார்.

கிளாஸ்கோ
100 கோடி தடுப்பூசிகளை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது இந்தியா.. எரிபொருள் வரி குறைப்பு மற்றும் கிளாஸ்கோவில் சமீபத்திய காலநிலை உறுதிப்பாடுகள் உட்பட அவரது "வெற்றிகரமான வெளிநாட்டு பயணங்கள்" ஆகியவற்றிற்காக பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முக்கியத்துவம்
எனினும், சமீபகாலமாகவே, பெட்ரோல் டீசல் உயர்வு, விவசாயிகள் போராட்டம் போன்ற காரணங்களால் பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. பஞ்சாப் தவிர, மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், வரும் வருடங்களில் கட்சியின் செல்வாக்கை சரியாமல் பார்த்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. அதிலும் உத்தரபிரதேசம்தான் இப்போதைக்கு பாஜகவுக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கிறது..

சவால்
பிரியங்கா காந்தி சமீப காலமாகவே, அங்கே முழுமூச்சுடன் செயல்பட்டுவருவதாலும், முதல்வர் யோகிக்கே நேரடியாக சவால் விட்டுள்ளதாலும், உபியை வென்றாக வேண்டிய கட்டாயமும் அக்கட்சிக்கு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நாளை நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டமானது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, ஜேபி நட்டா பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேசிய செயற்குழு கூட்டம் இதுவாகும் என்பதால், அதீத கவனத்தையும் இக்கூட்டம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications