தேஜஸ்வி சூர்யாவுக்கு திடீர் செக்.. பாஜக முக்கிய பதவி பறிப்பு.. நிதின் நிபின் அதிரடி அறிவிப்பு
டெல்லி: நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற நிலையில், அவர் புதிய தேசிய நிர்வாகிகளை அறிவித்தார். அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் தேஜஸ்வி சூர்யாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய தலைவராக இருந்தவர் ஜேபி நட்டா. கடந்த 2020ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அவரே பாஜகவை தேசியளவில் வழிநடத்தினார். இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் பாஜகவின் புதிய தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார். பாஜகவின் செயல் தலைவராக இருந்த நிதின் நபின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிய பதவிகள்
இதற்கிடையே அவர் இப்போது தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் உள்ளிட்டோர் தேசிய பொது செயலாளர்களாக இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தள பிரிவு
தேசிய அளவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் உடனான ஆலோசனைகளுக்கு பிறகு இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பல தலைவர்கள் தங்கள் பதவிகளையும் இழந்துள்ளனர். குறிப்பாக பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த அமித் மாளவியா, அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐடி பிரிவுக்கு பதிலாக சமூக வலைத்தள பிரிவு என்று தனியாக ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கரை சேர்ந்த தீபக் மாஸ்கே, அதன் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேஜஸ்வி சூர்யா
அதேபோல பாஜகவின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர் தேஜஸ்வி சூர்யா. பெங்களூர் தெற்கு எம்பியான இவர் கடந்த 2020ம் ஆண்டு முதலே பாஜவின் இளைஞரணியான யுவ மோர்ச்சா தலைவராக இருந்தார். இவரும் இந்த பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குஜராத்தை சேர்ந்த ஹேமங் ஜோஷி என்பவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற Gen Z போராட்டங்களை தொடர்ந்து இந்த மாற்றங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்?
கர்நாடகாவை சேர்ந்த இளம் பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா, வழக்கறிஞராகவும் அரசியல் செயல்பாட்டாளராகவும் தனது பயணத்தை தொடங்கினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தேசிய அரசியலில் கவனம் பெற்றார். இளம் வயதிலேயே மக்களவை உறுப்பினராக தேர்வானவர்களில் ஒருவராகவும் தேஜஸ்வி சூர்யா இருக்கிறார்.
பாஜகவின் இளைஞரணி பிரிவான யுவ மோர்ச்சாவின் தேசிய தலைவராகவும் தேஜஸ்வி சூர்யா கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படும் அவர், பல விஷயங்கள் குறித்தும் கருத்து கூறுவார். அவரது சில கருத்துகள் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதர முக்கிய அறிவிப்புகள்
முன்னாள் தேசிய பொதுச்செயலாளரான ராம் மாதவ், தற்போது பாஜகவின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பி.எல். சந்தோஷ் தொடர்ந்து தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பில் நீடிக்கிறார். ஸ்மிருதி இரானி, பிப்லப் குமார் தேப், ராஜ்யசபா எம்.பி. சதீஷ் பூனியா, மக்களவை எம்.பி. கஜேந்திர படேல், முன்னாள் மக்களவை எம்.பி. ஹரிஷ் திவேதி, ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் பாட்டியா ஆகியோர் தேசிய பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
