'ஜாதி' பார்த்துதான் டெல்லி முதல்வராக ரேகா குப்தாவை தேர்வு செய்த பாஜக.. அமைச்சரவையையும் பாருங்க!
டெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தாவை பாஜக தேர்ந்தெடுத்ததற்கு முதன்மை காரணமே அவர் பனியா ஜாதியை சேர்ந்தவர் என்பதால்தானாம்; பனியாக்கள்தான் வாஜ்பாய்- அத்வானி காலத்தில் இருந்தே பாஜகவின் பிரதான வாக்கு வங்கி என்பதால் அந்த சமூகத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டெல்லி முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. டெல்லி முதல்வர் பதவிக்கு சீனியர்களான பர்வேஷ் சிங் வர்மா, விஜேந்தர் குப்தா உள்ளிட்ட பலரும் முட்டி மோதிப் பார்த்தனர். ஆனால் பாஜக மேலிடமோ முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற ரேகா குப்தாவை முதல்வராக்கிவிட்டது.

இதனால் அதிருப்தியடைந்த பர்வேஷ் சிங் வர்மாவை துணை முதல்வராக்கிவிட்டது பாஜக; மூத்தவரான விஜேந்தர் குப்தாவை டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை சபாநாயகராக அறிவித்துவிட்டது.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்த போது, ரேகா குப்தாவை மேலிடம் தேர்ந்தெடுக்க ஒரே காரணம் அவர் பனியா ஜாதியைச் சேர்ந்தவர்தான் பனியாக்கள் வர்த்தகர்கள். டெல்லியில் பாஜக இத்தனை ஆண்டுகாலம் அதிகாரத்தில் இல்லாத போதும் தாக்கு பிடித்து நின்று இன்று 27 ஆண்டுகளுக்கு ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணமே பனியாக்கள் வாக்குகள்தான். வாஜ்பாய்- அத்வானி காலத்தில் இருந்தே பனியாக்கள்தான், பாஜகவின் முதுகெலும்பாக இருக்கும் வாக்கு வங்கி. ஆகையால்தான் என்னதான் சீனியர்களாக இருந்தாலும் அத்தனை பேரையும் ஓரம் கட்டிவிட்டு ஜாதி பார்த்து ரேகா குப்தாவை டெல்லி முதல்வராக்கி இருக்கிறது பாஜக மேலிடம் என்கின்றனர்.
மேலும் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு பெண்கள் வாக்குகள் பெரும் உதவியாக இருந்தது; பாஜகவின் பெண்களுக்கான மாதம் ரூ2,500 உதவித் தொகை வாக்குறுதி பேரலையாக வாக்குகளை குவிக்க வைத்தது. இதனால் பனியா மற்றும் பெண் என்ற அடிப்படையில் ரேகா குப்தாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறது பாஜக என்கின்றனர்.
முதல்வர் பதவிதான் என்றில்லை.. இன்று பதவியேற்ற 6 அமைச்சர்களுக்கும் 'ஜாதி பார்த்துதான்' வாய்ப்பு கொடுத்திருக்கிறது பாஜக எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
ரேகா குப்தாவுடன் இன்று அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் பர்வேஷ் வர்மா, மஜிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா, ஆஷிஸ் சூட், பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்த்ராஜ் சிங்.
முதல்வர் பதவிக்கு மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த பர்வேஷ் வர்மா 'ஜாட்' ஜாதியில் முக்கியமான தலைவர்; அவரை புறக்கணிக்க முடியாது என்பதால் துணை முதல்வராக்கி இருக்கிறது பாஜக. சீக்கியர் இனத்தைச் சேர்ந்தவர் மஜிந்தர் சிங் சிர்சா. பாஜகவின் பிராமணர் ஜாதி முகமாக இருப்பவர் கபில் மிஸ்ரா. பஞ்சாபி காத்ரி ஜாதியின் பிரதிநிதியாக அறியப்படுகிறவர்தான் ஆஷிஸ் சூட். ரவீதர் சிங் தலித் ஜாதி தலைவர்களில் ஒருவர்.
ரேகா குப்தா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பங்கஜ் குமார் சிங், பல் மருத்துவர். ஆனாலும் பூர்வாஞ்சலி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது; ஏனெனில் ஆம் ஆத்மி வாக்கு வங்கியாக இருந்த பூர்வாஞ்சலி வாக்குகளை பாஜகவுக்கு மடை மாற்றியதில் பங்கஜ் குமார் சிங் முக்கிய பங்கு வகித்தவர். அதனால் அவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நீங்களே சொல்லுங்க.. இப்ப எல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க?












Click it and Unblock the Notifications