சத்தீஸ்கர், ம.பியில் பெரிய ட்விஸ்ட்.. பாஜக வெற்றிக்கு கை கொடுத்த முஸ்லீம் வாக்குகள்.. டேட்டா இதோ
டெல்லி: நடந்து முடிந்த 4 மாநில சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலத்தில் முஸ்லீம் வாக்குகள் பாஜகவின் வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பாஜக மூன்று மாநிலங்களில் வென்றுள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ராஜஸ்தானில் பாஜகவுக்கு கடும் போட்டி இருக்கும் என்றும், சத்தீஷ்கரில் காங்கிரஸ் 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலானவை கூறின.

ஆனால், தேர்தல் முடிவுகள் இதை அப்படியே தலைகீழாக மாற்றி போட்டது. ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது. குறிப்பாக சத்தீஷ்கரில் 54 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் போதும். ஆனால், பாஜக பெரும்பான்மையை விட அதிக இடங்களை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது. இதனால், அங்கு இழந்த ஆட்சியை பாஜக பிடிக்க உள்ளது.
முஸ்லீம் வாக்குகள்: மத்திய பிரதேசத்திலும் பாஜக தனது ஆட்சியை பறிகொடுக்காமல் தக்க வைத்துள்ளது. மொத்தம் உள்ள 230 இடங்களில் பாஜக 160 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த தேர்தலை விட பாஜக கூடுதலாக 55 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை 35 தொகுதிகளில் முஸ்லீம் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் அளவுக்கு பெரும்பான்மையாக இருந்தன.
இதனால், இந்த தொகுதிகளில் காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளுமே கூடுதல் கவனம் செலுத்தி பிரசாரம் மேற்கொண்டன. முஸ்லீம் வாக்குகளை கவரும் விதமாக தீவிர பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டது. முஸ்லீம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள 35 தொகுதிகளில் பாஜக 29-ஐ கைப்பற்றியுள்ளது. காங்கிரஸுக்கு 6 இடங்கள்தான் கிடைத்தன. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இது பலத்த அடியை கொடுத்துள்ளது.
பாஜகவுக்கு ஆதரவு: அதேபோல், சத்தீஷ்கரில் முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையான 14 தொகுதிகளில் 12-ல் பாஜக வென்றது; 2-ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு மாநிலங்களிலுமே முஸ்லீம்கள் வாக்காளர்களின் கணிசமான ஆதரவு பாஜகவுக்கு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. பாஜகவுக்கு இது பெரிய பூஸ்டாக அமைந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது அக்கட்சிக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தினாலும் இந்த தொகுதிகளில் கடுமையான சவாலை பாஜக கொடுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications