சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே ஆர் ஸ்ரீராமை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை.. யார் இவர்?
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கே ஆர் ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையில் நேற்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையில் நேற்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டம் நடந்தது. இதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் வி கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த ஆர். மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி கடந்த மே 24 இல் இருந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர் மகாதேவன் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து தான் தற்போது இவரது இடத்திற்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே. ஆர். ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
ஜூன் 21, 2013 ஆம் ஆண்டு நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மும்பை உயர் நீதிமன்றத்தின் 2-வது மூத்த நீதிபதியாக பதவியேற்றார். நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் அனுபவமுள்ள கே ஆர் ஸ்ரீராம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர். இவர் கோவாவின் பார் கவுன்சிலில் ஜூலை 3, 1986 இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். வணிக விவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.
இதேபோல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையில் நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications