யூடியூப், இன்ஸ்டா உட்பட.. சமூக வலைத்தள பதிவுகளுக்கு வருகிறது கடிவாளம்.. வரைவு மசோதா சொல்வது என்ன?
டெல்லி: தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒளிபரப்பு சேவை தொடர்பான புதிய வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது. இதில், யூடியூப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் செய்தியை வெளியிடுவோருக்கு விரிவான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஓடிடி தளம், டிஜிட்டல் செய்தி ஊடகங்களுக்கும் விதிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்...
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தொழில்முறை பங்குதாரர்களுடன் வரைவு சட்டத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் இன்டிபென்டென்ட் கிரியேட்டர்ஸ் எனும் சுயாதீன படைப்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஒலிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) வரைவு மசோதா (2023) கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த வரைவு மசோதா நாட்டில் ஒலிபரப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்குவது, ஓடிடி தளம், டிஜிட்டல் செய்திகளை உள்ளடக்கிய ஒலிபரப்பு சேவைகள் விரிவுபடுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இருந்தன.
இந்நிலையில், ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதா 2024 வெளியிடப்பட்டுள்ளது. இதில், சமூக ஊடக கணக்குகள், ஓடிடி, ஆன்லைன் வீடியோ படைப்பாளர்கள், டிஜிட்டல் செய்திகளுக்கும் விதிமுறைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பதிப்பில், "டிஜிட்டல் செய்தியாளர் தாங்கள் வெளியிடும் கன்டென்டுகளின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு அரசாங்கத்துடன் முன்பதிவு செய்ய வேண்டும்" என்று கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2024 வரைவில் "டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளர்" அல்லது "செய்தி மற்றும் நடப்பு விவகார உள்ளடக்கத்தின் வெளியீட்டாளர்" என்று ஒரு புதிய வகை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளிதழ்களின் இ-பேப்பர்களைத் தவிர ஆன்லைன் செய்தித்தாள், செய்தி போர்டல், வலைதளம், சமூக ஊடக இடைத்தரகர் அல்லது பிற ஊடகம் மூலம் செய்தி மற்றும் நடப்பு விவகார நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வோர், "டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளர்" அல்லது செய்தி மற்றும் நடப்பு விவகாரத்தின் உள்ளடக்க வெளியீட்டாளர்" என்று வரையறுக்கப்பட்டுள்ளனர்
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இல் உள்ள வரையறையைப் போல் இல்லாமல், இந்த மசோதா, குறிப்பாக தனிப்பட்ட பயனர்களான டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளர்களை வரையறுப்பதில் மாற்றம் செய்துள்ளது. 2021 ஐடி விதிகளின் பகுதி III, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஓவர்-தி-டாப் (ஓடிடி) தளங்களை ஒழுங்குபடுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரத்தில் இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. செய்தி மற்றும் நடப்பு விவகார வெளியீட்டாளர்கள் நெறிமுறைக் கோட்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் விதி 9 (1) மற்றும் 9 (3) ஐ, மும்பை மற்றும் சென்னைஉயர் நீதிமன்றங்கள் நிறுத்திவைத்தன. எனவே, டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளர்கள், ஒளிபரப்பு மசோதாவில் உள்ள விதிகளுக்கு தடை கோரினால், இந்த நீதிமன்ற உத்தரவுகள் ஒரு முன்னுதாரணமாக செயல்படக்கூடும்.
புதிய வரைவில், சில நிபந்தனைகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு படைப்பாளர் டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பாளராக இருக்கிறார் என்றால் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள் சொந்த செலவில் செய்திகளுக்கு ஒரு கமிட்டி உருவாக்க வேண்டும், அந்த கமிட்டியில் பெண்கள், குழந்தைகள் நலம், பட்டியலின பிரிவு, பழங்குடி, சிறுபான்மை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை இணைத்து அந்தப் பட்டியலை அரசுக்கு வழங்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.50 லட்சமும், அதுவே அடுத்த 3 ஆண்டுகளில் தொடரும் பட்சத்தில் ரூ.2.5 கோடியும் அபராதம் விதிக்கப்படும்.
நாட்டு நடப்புகள் குறித்து சில யூடியூபர்கள் வெளியிட்ட வீடியோக்கள் அரசுக்கும், அரசில் அங்கம் வகித்த சீனியர் நிர்வாகிகளுக்கு எதிராக கிளம்பியது. இது நாடாளுமன்ற தேர்தலிலும் ஆட்சியாளர்களுக்கு பின்னடைவை கொடுத்தது என்பதால் இப்போது டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து இறுக்கி பிடிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடனே, இதுதொடர்பாக பங்குதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டது அமைச்சகம்.
மேலும் இந்த வரைவின்படி பேஸ்புக், யூடியூப், எக்ஸ் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு, சிலவற்றில் மட்டும் மூன்றாம் தரப்பு (Third Party) கன்டென்ட்களுக்கான பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த சமூகவலைதள நிறுவனங்கள் தங்களுடன் தொடர்பில் உள்ள டிஜிட்டல் செய்தி ஒளிபரப்பு மற்றும் ஓ.டி.டி ஒளிபரப்பாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்காவிடின் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் பரிந்துரை செய்துள்ளது.












Click it and Unblock the Notifications