‛சிக்ஸ்’.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சாதனை! சிதம்பரத்தை பின்னுக்கு தள்ளி மொராஜி தேசாயுடன் சமன்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் தான் மத்திய பட்ஜெட் தாக்கலில் அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோரை முந்தி முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இது நிர்மலா சீதாராமனின் 6வது மத்திய பட்ஜெட்டாகும்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்த நிலையில் நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இந்தியாவில் பெண் ஒருவர் முழு நேர நிதி அமைச்சராக நியமனம் செய்யப்படாத நிலையில் அந்த பெருமையை அப்போது அவர் பெற்றார்.
அதன்பிறகு நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டில் முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இன்று அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது 6வது முறையாகும்.
இந்நிலையில் தான் நிர்மலா சீதாராமன் தனது 6வது பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதாவது இந்தியாவில் இப்போது வரை நிதி அமைச்சராக ஒருவர் 6 பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்த நபர் என்றால் அது முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் தான். இவர் 1959ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை 5 முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பிறகு யாரும் இந்த சாதனையை நிகழ்த்தாமல் இருந்தனர். இந்நிலையில் தான் இன்றைய தினம் மொராஜி தேசாயின் சாதனையை நிர்மலா சீதாராமன் சமன் செய்துள்ளார்.
மேலும் இதற்கு முன்பு மத்திய நிதி அமைச்சர்களாக இருந்த முன்னாள் பிரதமர் மன்கேமாகன் சிங், யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம், மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் தொடர்ந்து 5 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். தற்போது நிர்மலா சீதாராமன் 6வது பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்வதால் இவர்களின் 4 பேர் சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications