"மோடி.. மோடி.." நிர்மலா சீதாராமன் அறிவித்த அந்த நொடி.. அதிர வைத்த பாஜக எம்பி-க்கள்.. என்ன விஷயம்?
டெல்லி: புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருந்த பாஜக எம்பி-க்கள் ஒன்று சேர்ந்து, மோடி.. மோடி என்று கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், சரியாக ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் வேளாண்மை, மருத்துவம், உற்பத்தி, மருத்துவம், காப்பீடு மற்றும் புதிய திட்டங்கள் என்று ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இருப்பினும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு வருமான வரி உச்ச வரம்பு மீதே இருந்தது. வருமான வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா என்று பலரும் ஆவலுடன் இருந்தனர். இந்த நிலையில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகப்பெரிய பலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
இதன் மூலமாக கூடுதலாக ரூ.75 ஆயிரம் கழிவு மக்களுக்கு கிடைக்கும். இதன்படி மாத ஊதியம் ரூ.1 லட்சம் வரை பெறுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தெரிய வந்துள்ளது. இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அந்த நிமிடமே, பாஜக எம்பி-க்கள் அனைவரும் மோடி.. மோடி.. என்று கோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.
மக்களின் செலவு செய்யும் திறனை அதிகரிக்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வரியும் இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவிகிதமும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவிகிதமும் வரிவிகிதம் இருக்கும்.
அதேபோல் ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவிகிதம் வரிவிகிதமும், ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 20 சதவிகிதமும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 25 சதவிகிதம் வரிவிகிதமும், ரூ.24 லட்சத்திற்கும் மேல் 30 சதவிகிதமும் வருமான வரிவிகிதம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications