இந்த 5 மாநில அகதிகள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.. ஆனால் சிஏஏ சட்டத்தில் இல்லை.. ஏன் தெரியுமா
டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிகளை மத்திய அரசு இன்னும் வகுக்காத நிலையில், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள அகதிகள் தற்போதைய விதிகளின் கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் தஞ்சம் புகுபவர்களுக்கு சில குறிப்பிட்ட விதிகளின் கீழ் குடியுரிமை வழங்கப்படும். தஞ்சம் புகுந்துள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் இந்தியாவில் தங்க வேண்டும் உள்ளிட்ட சில விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்.
இந்நிலையில் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் உள்ள அகதிகளுக்கு தற்போதைய விதிகளின் கீழ் குடியுரிமை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகதிகளுக்குக் குடியுரிமை
இந்த மாவட்டங்களில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சமூகங்களைச் சேர்ந்த அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2009 ஆகியவற்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019இல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் வெளியிடப்படவில்லை.

ஏன் பழைய விதிகள்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முறையாக இன்னும் விதிகள் உருவாக்கப்படவில்லை என உள் துறை அமைச்சகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பழைய விதிகளைப் பின்பற்றி குடியுரிமை வழங்க இதுவும் ஒரு காரணமாகும். ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு கலெக்டர் அல்லது செயலாளர் ஒப்புதல் அளிப்பார். அதேபோல விண்ணப்பங்களை மத்திய அரசு அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்
இதன் மூலம் மாவட்ட கலெக்டர் ஒருவர் அகதிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து குடியுரிமை வழங்கலாம். கடந்த 2018ஆண் ஆண்டும் மத்திய அரசு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலெக்டர்களுக்கு இதேபோன்ற அதிகாரத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஒரு விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து அவருக்குக் குடியுரிமை வழங்கினாலும் அல்லது நிராகரித்தாலும் இது குறித்து மத்திய அரசுக்கு 7 நாட்களில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகள் உருவாக்கப்படாதது ஏன்
குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறி ஓர் ஆண்டு ஆகும் நிலையிலும், இதுவரை மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை உருவாக்கவில்லை. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சட்டத்தைச் செயல்படுத்த விதிகள் அவசியம். ஆனால் என்ன சிக்கல் என்றால். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்கள் என்பதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் சட்டவிரோத குடியேறிய பலர் எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் நுழைந்தவர்கள் என்பதால் இதில் சிக்கல் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications