போன் பே மூலமாகவே ITR தாக்கல் செய்யலாமா? உண்மை என்ன? கடைசி நாள் நெருங்குது.. வரி செலுத்துவது எப்படி?
டெல்லி: போன் பே மூலம் வருமான வரி செலுத்தும் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போன் பே மூலம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும் என தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அப்படி செய்ய முடியாது. வருமான வரி வலைதளம் மூலம் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகு, போன் பே மூலம் எளிதாக வரி செலுத்த முடியும்.
இந்தியாவில் தற்போது அனைத்து இடங்களிலும் பணப் பரிமாற்ற சேவைகள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. பெரிய நிறுவனங்கள் தொடங்கி, டீக்கடை, காய்கறிக் கடை வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை பரவலாகி விட்டது. தற்போது பெரும்பாலான இடங்களில் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்.

கூகுள் பே, போன் பே, பேடிஎம் உட்பட பல செயலிகள் யுபிஐ மூலம் உடனடியாக எளிதாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவுகிறது. ரீசார்ஜ் செய்வது தொடங்கி, மின் கட்டணம், பல்வேறு வரிகள் செலுத்துவதை இந்த ஆப்கள் மூலமாகவே செய்ய முடியும். இந்நிலையில், வருமான வரியையும் எளிதாக செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது போன் பே.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. கடைசி நாள் நெருங்கும் நிலையில், மாத சம்பளம் வாங்குவோர், நிறுவனங்கள் அடித்துப் பிடித்து, வருமான வரி படிவத்தை தாக்கல் செய்து, தாங்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தி வருகின்றன.
இந்நிலையில் தான், PhonePe செயலி புதிதாக 'Income Tax Payment' என்ற வருமான வரி செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. UPI மற்றும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சுய மதிப்பீடு செய்து எளிதாக வரி செலுத்துவதற்கு இது உதவுகிறது. இந்த ஆப் மூலம் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.
இதற்காக PayMate பி2பி நிறுவனத்துடன் PhonePe ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே வருமான வரி செலுத்த முடியும். பொதுவாக, வருமான வரி செலுத்துவதற்கு இன்கம் டாக்ஸ் வலைதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். ஆனால், போன் பே மூலம் வரி செலுத்தும்போது வருமான வரி இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டிய அவசியமில்லை.
போன் பே செயலியில் உள் நுழைந்து Financial services and Taxes என்ற பகுதிக்குள் சென்று 'Income Tax' என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் வரி வகை, மதிப்பீட்டு ஆண்டு, பான் கார்டு எண் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். பின்னர் வரி தொகையை சரிபார்த்து உள்ளிட்டு, Pay Tax என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.

பின்னர், கிரெடிட் கார்டு, அல்லது யுபிஐ பயன்படுத்தி போன் பே மூலம் பணம் செலுத்தலாம். வருமான வரி செலுத்திய ஒரு நாளுக்குள், வரி செலுத்துவோர் தனிப்பட்ட பரிவர்த்தனை எண்ணைப் பெறுவார்கள். இரண்டு வேலை நாட்களில் பேமென்ட் சலான் கிடைத்துவிடும். இந்த முறையால் பாதுகாப்பாக மிக எளிதாக வருமான வரி செலுத்தலாம்.
இதற்கிடையே, போன் பே மூலமே ITR ஃபைல் செய்யலாம் என்ற தவறான தகவல் பரவி வருகிறது. ஆனால், அது தவறான தகவல். போன் பே ஆப் மூலம் வருமான வரி மட்டுமே செலுத்த முடியும். வருமான வரி படிவத்தை தாக்கல் செய்ய முடியாது, வழக்கமான முறையில் வருமான வரி வலைதளத்திற்குச் சென்றே வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications