வரலாற்றிலேயே முதல்முறை! தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு.. அசத்தல்!
டெல்லி: முதல் முறையாக தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளிலும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஒவ்வொரு ஆண்டும் கான்ஸ்டபிள் GD தேர்வை நடத்துகிறது. சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற மத்திய ஆயுதப்படை (CAPF) தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் அந்ததந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் மத்திய அரசின் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
மத்திய அரசின் தேர்வுகள் இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது, இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநில இளைஞர்களும் ஆயுதப்படையில் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பல்வேறு தரப்பிலும் இருந்து வந்த தொடர் கோரிக்கைகளை அடுத்து, 13 மாநில மொழிகளில் மத்திய ஆயுதப்படை தேர்வை நடத்த உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இந்த நிலையில் இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்மறு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
முதல் முறையாக, மாநில மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த முடிவின் விளைவாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் தேர்வில் கலந்துகொள்வதோடு அவர்களின் தேர்வு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
