டெல்லிக்கு போன 'காவிரி'! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை! தமிழ்நாடு, கர்நாடகா அரசுகள் ரொம்ப சீரியஸ்!
டெல்லி: காவிரி பிரச்சனை தற்போது டெல்லியில் மையம் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா டெல்லியில் முகாமிட்டு ஆலோசனைகள் நடத்துகின்றனர்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை; இதனால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி கருகிக் கொண்டிருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டுக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இதனை கர்நாடகா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காவிரி பிரச்சனை: காவிரி நீர் திறப்பு தொடர்பாக 2 முறை ஆலோசனை நடத்திய காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது. இதனை ஏற்று காவிரி நீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் காவிரியில் 24,000 கன அடி நீர் தேவை என்பது தமிழ்நாட்டின் வாதம்; காவிரியில் சொற்ப அளவு நீர்தான் திறக்க முடியும் என்கிறது கர்நாடகா. இதனால்தான் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது. கர்நாடகாவும் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்ய கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு: இந்நிலையில் கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவும் நேற்று அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது.
துரைமுருகன் ஆலோசனை: இதனிடையே இன்று டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக் கூடாது என நினைக்கிறது கர்நாடகா; நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை உச்சநீதிமன்றம் என திட்டவட்டமாக கூறினார்.
சித்தராமையா 'டேரா' : மேலும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் இன்று கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பிக்களுடன் காவிரி பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார் சித்தராமையா. காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு நடத்துகிறது; கர்நாடகாவோ சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளாமல் பேச்சுவார்த்தை என்கிற பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுக்க விரும்புகிறது .












Click it and Unblock the Notifications