காவிரி நதி நீர் வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு vs கர்நாடகா இடையே காரசார வாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி உரிய நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பினையும் பின்பற்றாமல் நீரை திறந்துவிட மறுக்கிறது என வாதம் வைத்தது. அதே போல் கர்நாடக அரசு சார்பில், எங்களால் முடிந்த அளவுக்கு தண்ணீரை திறந்துவிட்டு வருகிறோம் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இரு மாநிலங்களும் தனித்தனியாக தற்போதைய நிலவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழகம் மற்றும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கினை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Cauvery water

தமிழக அரசு மனு

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறக்காமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 80.41 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் தற்போது வரை வெறும் 25.59 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டுள்ளது. இதற்கிடையே காவிரி ஒழுங்காற்று குழு அளித்த பரிந்துரைப்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் 9,000 கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று கூறியது.

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவுப்படி அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் 9,000 கன அடி நீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்து இருந்தது. ஆனால் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை மதிக்காமல் இருந்து வருகிறது.

தமிழக அரசு வைத்த வாதம்

இந்த நிலையில் தான் இன்று, காவிரியில் உரிய நீரை திறந்துவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவுப்படி கர்நாடக அரசு செயல்பட மறுக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவினை கூட கர்நாடக அரசு மதிக்கவே இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படியும் உரிய நீரினை திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவினையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. ஆனால் கர்நாடகத்தில் பாசனத்திற்காக 20 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டுள்ளது. இங்கு தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விகிதாச்சார அடிப்படையில் கூட கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை. என்று வாதிட்டது.

கர்நாடக அரசு வாதம்

அப்போது நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடுகிறதா என கேள்வி எழுப்பினர். இதற்கு கர்நாடக அரசு தரப்பில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி காவிரியில் நீர் திறந்து விடப்படுகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் காவிரியில் வினாடிக்கு 9,000 கன அடிக்கும் அதிகமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

எங்கள் அணைகளில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து கூடுதலாக தண்ணீர் திறக்கவும் முயற்சித்து வருகிறோம். தற்போது கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உள்ளது" என்று வாதிட்டது.

தமிழக அரசு கோரிக்கை

அப்போது தமிழக அரசு சார்பில், கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களது பாசனத்திற்கு 52 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டுள்ளார்கள். கர்நாடக அணிகளில் சுமார் 73 டிஎம்சி நீர் இருக்கும்போது கூட தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க மறுக்கின்றனர். கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாததால் குறுவை சாகுபடிக்கு கூட மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியவில்லை.

நீதிபதிகள் உத்தரவு

இதனால் 24 லட்சம் ஏக்கருக்கு மேலாக சாகுபடி செய்ய முடியாமல் தமிழகம் பாதிப்படைந்துள்ளது. இங்கு எங்களால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது. எனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிட கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அடுத்து, 15 நாட்களுக்குப் பிறகே காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் கூட உள்ளது. ஆனால் இந்த வாரமே மீண்டும் ஆணையம் ஆலோசனை நடத்தி எங்கள் கருத்துக்களை கேட்டு கூடுதல் நீரை திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தற்போதைய நிலவரத்தை தமிழகம் மற்றும் கர்நாடக ஆகிய இரு அரசுகளும் தனித்தனியாக அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+