தமிழகம் கேட்பது 20 டிஎம்சி.. கர்நாடகா சொல்வது 16 டிஎம்சி.. காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: காவிரி நீர் விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு உரிய நீரை திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் போதிய நீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்றப்பட்டுள்ளதாக கர்நாடகா கூறியிருந்தது. இது தொடர்பாக விரிவான பதிலளிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கை கர்நாடகா உடனடியாக திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

காவிரி விவகாரம்
விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி, காவிரி நீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரில் உரிய பங்கை மட்டுமே தாங்கள் கோருவதாக வைத்தியநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும், "தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி விகிதாச்சார அடிப்படையில் நீர் திறக்கப்பட வேண்டும் என்பதை தான் நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு கிடைக்க வேண்டியதில் 50.5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் முழுமையாக கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார். இதையடுத்து தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை எவ்வளவு என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு
அதற்கு பதிலளித்த வைத்தியநாதன், தமிழகத்தின் கணக்குப்படி 20 டிஎம்சி நீர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார். ஆனால், கர்நாடகா தரப்பில் இந்த பற்றாக்குறை 16 டிஎம்சி மட்டுமே என தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் தமிழகத்தின் நீர் பற்றாக்குறை குறித்து முறையிட்டும், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வைத்தியநாதன் குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், "அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகும், எங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்த அளவு நீரை மட்டுமே திறக்கிறார்கள். இப்போது பற்றாக்குறையை ஈடுகட்டாவிட்டால், பருவமழை காலமும் முடிவுக்கு வந்துவிட்டது" என்று வைத்தியநாதன் தெரிவித்தார். கோடை காலத்திலிருந்தே கர்நாடகா தனது நீர் வளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை கருத்தில் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
கர்நாடகா
கர்நாடகா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், "காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளின்படியே, கர்நாடகா நீரை தொடர்ந்து திறந்து வருகிறது. கர்நாடகாவில் வறட்சி நிலவி வருகிறது. இந்த சூழலில் நீரை திறப்பது சிரமமாக இருந்தாலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதையும் தாண்டி கூடுதல் அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இதற்கு நீதிபதிகள், கர்நாடகா ஏற்கெனவே வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறந்துள்ளது தங்களுக்கு தெரியும் என்றும் இப்போது தமிழ்நாடு தனக்குரிய பங்கை தரவில்லை என்பதே மட்டுமே கோரிக்கையாக முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர். கர்நாடகாவில் தற்போது வறட்சி நிலவுவதால், அங்கு மேலும் மழை பெய்யும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஷ்யாம் திவான் தெரிவித்தார்.
உத்தரவு
மேலும், தென்மேற்கு பருவமழை விலகி வருவதால் கர்நாடகாவுக்கு இனி மழை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அதேசமயம் தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழை மூலம் மழை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு நீதிபதிகள், தமிழக தரப்பு நீர் பற்றாக்குறை குறித்து புகார் எழுப்பியுள்ளது என்றும் அந்த பற்றாக்குறை தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீர் பற்றாக்குறை தொடர்பான மனுவுக்கு கர்நாடகா அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை அக்டோபர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications
