தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க.. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
டெல்லி: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் காவிரியில் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் திறக்க கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடக அரசு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் தண்ணீர் திறப்பை குறைக்க வேண்டும் என தெரிவித்தது. காவிரி ஒழுங்காற்று குழு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்திருந்த நிலையில், அதை ஏற்று நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் தொடங்கியது. தமிழகத்திற்கு நீர் திறக்க கோரி கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து இருந்த நிலையில், அதை ஏற்று நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே பிரச்சனை நிலவி வருகிறது. காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரை கூட திறக்க கர்நாடகா மறுத்து வருகிறது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டிய அளவு குறித்து கர்நாடகாவுக்கு உத்தரவிட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆனையத்தின் 56 வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கோரப்பட்டது. ஆனால், வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
தண்ணீர் திறந்துவிட முடியாது
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் தண்ணீர் போதுமான அளவில் இல்லை என தெரிவித்து கர்நாடக அரசு, ஆணையத்திடம் மேல் முறையீடு செய்தது. இதற்கான புதிய மனுவை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகா தாக்கல் செய்தது. வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுத்தால் கர்நாடகத்தில் குடிநீர் வினியோகம் கடும் சிரமங்களை சந்திக்க கூடும் என கர்நாடக அரசு தெரிவித்தது.
அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது சரியாக இருக்காது என கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட அனுமதிக்குமாறு கர்நாடகா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
6 ஆயிரம் கன அடி நீர் திறக்க பரிந்துரை
இதுபற்றி ஆலோசிக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று டெல்லியில் அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது தமிழ்நாட்டின் நீர்ப்பாசன சூழ்நிலைகள் ஆலோசிக்கப்பட்டது. காவிரியில் கூடுதல் நீர் திறக்கக் கோரி தமிழக அதிகாரிகள் முறையிட்டனர். மேலும் தமிழகத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
கர்நாடக அரசு தரப்பில் ஏற்கனவே அணையில் தண்ணீர் இல்லை. தமிழகத்திற்கு திறந்துவிட்டால் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இறுதியில் காவிரி ஒழுங்காற்று குழு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
