மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை - சிபிஐ விளக்கம்
டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக எந்த 'லுக் அவுட்' நோட்டீஸையும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸை பிறப்பித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் சிபிஐ இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
Recommended Video
டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, டெல்லி பல்வேறு மதுபான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கைக்கு டெல்லி மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் இந்த புதிய கொள்கைக்கு டெல்லி அரசு முற்றுப்புள்ளி வைத்தது.

இதனிடையே, புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சிபிஐ, முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேரின் பெயர்களை வழக்கில் சேர்த்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். விடிய விடிய 15 மணிநேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
இந்த சோதனையின் போது தனது கணினியையும், செல்போனையும் சிபிஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிரான போட்டியாளராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வளர்ந்து வருவதால், அவரை முடக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த சூழலில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 13 பேருக்கு எதிராக சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸை பிறப்பித்ததாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. பல்வேறு ஊடகங்களிலும் இதுதொடர்பான செய்தி வெளியாகியது.
சிபிஐ மறுப்பு
இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சிபிஐ தற்போது ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை எந்த 'லுக் அவுட்'நோட்டீஸும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதால் அரசாங்கத்துக்கு தெரிவிக்காமல் அவர்களால் வெளிநாடு செல்ல முடியாது. எனவே அவர்களுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸை பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என சிபிஐ கருதுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டல் ட்வீட்
இதற்கிடையே, லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், மணீஷ் சிசோடியா கிண்டலாக ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டில், "எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த முறைகேடுகளையும், தவறுகளையும் சிபிஐ கண்டுபிடிக்கவில்லை. வருமானத்துக்கு பொருந்தாத ஒரு பைசாவை கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அப்படியிருக்கும் போது, என்னை கண்டுபிடிக்க முடியாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை நீங்கள் பிறப்பித்திருக்கிறீர்கள். என்ன நாடகம் இது மோடிஜி. நான் சுதந்திரமாக டெல்லியில் சுற்றி வருகிறேன். சொல்லுங்கள், நான் எங்கு வர வேண்டும்? உங்களால் என்னை கண்டுபிடிக்க முடியவில்லையா?" என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications