சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள்.. கேந்திரிய வித்யாலயாவுக்கு 3ஆம் இடம் தான்.. அப்போ முதல்ல யார் தெரியுமா
டெல்லி: நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் பள்ளிகள் வாரியாக எந்த பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகம் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
அதன்படி இந்தாண்டு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15 முதல் மார்ச் 13 வரை நடைபெற்றது. தொடர்ந்து +2 பொதுத்தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது.

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு: இதற்கிடையே சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டு +2 பொதுத்தேர்வில் நாடு முழுக்க 87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். கடந்தாண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 87.33%ஆக இருந்த நிலையில், இந்தாண்டு அதைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.
சிபிஎஸ்இ தேர்விலும் இந்தாண்டு மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 85.12% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகளில் 91.52% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களைவிட 6.40% அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகள்: நாடு முழுக்க தேர்வு எழுதியவர்களில் 24,000க்கும் அதிகமானோர் 95 சதவீதத்துக்கு மேல் மார்க் பெற்றுள்ள நிலையில், 1.16 லட்சம் பேர் 90 சதவீதம் மேல் மதிப்பெண் எடுத்துள்ளனர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மண்டலம் வாரியாகவும் வெளியிடப்படும். இந்தாண்டு திருவனந்தபுரம் தான் அதிகபட்சமாக 99.91% பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து விஜயவாடா 99.04% பெற்றுள்ள நிலையில், சென்னை 98.47% மற்றும் பெங்களூரு - 96.95% பெற்றுள்ளது. தொடர்ந்து மேற்கு டெல்லி - 95.64% மற்றும் கிழக்கு டெல்லி - 94.51% மார்க் பெற்றுள்ளது. மேலும், சண்டிகர் - 91.06%, பஞ்ச்குலா - 90.26%, புனே - 89.78%, அஜ்மீர் - 89.53% பிராந்தியங்களில் தேர்ச்சி சதவிகிதம் உள்ளது. குறைந்தபட்சமாக பிரயாக்ராஜ்ஜில் தேர்ச்சி விகிதம் 78.35% ஆக உள்ளது.
முதலிடம் எந்த பள்ளி: மேலும், பள்ளி வாரியாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சிடிஎஸ்ஏ எனப்படும் மத்திய திபெத்திய பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. அங்குப் படித்த மாணவர்களில் 99.23% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நவோதயா வித்தியாலயா பள்ளிகளில் தேர்ச்சி விதிதம் 98.90 சதவீதமாகவும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 98.81 சதவீதமாகவும் இருக்கிறது. தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.42 சதவீதமாகவும் அரசுப் பள்ளிகளில் 88.23 சதவீதமாகவும் தனியார்ப் பள்ளிகளில் அது 87.70 சதவீதமாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications