9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மும்மொழி கட்டாயம்.. சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு!
டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மொழிகளில் 2 இந்திய மொழிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், 3வது மொழிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழி கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தில் கட்டாயமாக மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

மே 15 அன்று சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு 2026-27 கல்வியாண்டு கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கிவிட்டதால், இந்த புதிய முறையை அமல்படுத்துவதில் பள்ளிகளுக்கு சில தளர்வுகளும், இடைக்காலத் திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய திருத்தப்பட்ட முறையின் கீழ், மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பார்கள். இதில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மொழிகளாக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள் வெளிநாட்டு மொழி ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், மற்ற இரண்டு மொழிகளும் கண்டிப்பாக இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
ஒருவேளை வெளிநாட்டு மொழியை நான்காவது கூடுதல் பாடமாக மாணவர்கள் படிக்கலாம். பள்ளிகளில் இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்வதை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
அதேபோல் பிராந்திய மொழிகளுக்கு தகுதியான மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை பல பள்ளிகளில் இருப்பதை வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதைக் கையாள பள்ளிகளுக்குச் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 'சஹோதயா' (Sahodaya) கூட்டமைப்புகள் மூலம் பள்ளிகள் தங்களுக்குள் ஆசிரியர்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் ஹைப்ரிட் வகுப்புகளை நடத்தலாம். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது தகுதியான முதுகலை பட்டதாரிகளைத் தற்காலிகமாகப் பணியமர்த்திக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. அதேபோல் 3வது மொழிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளே அந்த மொழிக்குரிய மதிப்பீட்டை நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications