உஷார் நிலை: காஷ்மீர் பள்ளத்தாக்கில் 50% குறைந்த தாக்குதல்.. ராணுவத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு?
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 1,275 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் 2019ம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததைவிட தற்போது 50% குறைந்திருப்பதால் இப்பகுதியிலிருந்து ராணுவ வீரர்களை முற்றிலுமாக திரும்பப்பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் ஒரு அங்கமான ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழும் என்று முன்னரே கணிக்கப்பட்டிருந்ததால் அதற்கான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரசியல் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்நிலையில் தற்போது நிலைமை ஓரளவு இயல்புக்கு திரும்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

தாக்குதல்கள்
இவ்வாறு இருக்கையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 1,275 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல 384 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் 389 பேர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துக்கொண்டே வருகிறது. எனவே பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து ராணுவ வீரர்களை முற்றிலுமாக திரும்பப்பெறுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

பாதுகாப்பு
ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 1.3 லட்சம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் வீரர்கள் எல்லையிலும், 40-50 ஆயிரம் வீரர்கள் கிராமப்புற பகுதிகளிலும் தீவிரவாத எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையும் இணைந்து பணியாற்றி வருகிறது. இது தவிர 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஆர்பிஎஸ் வீரர்கள் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சர்ச்சைக்குரிய பள்ளத்தாக்கு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

காவல்துறை
இதுவும் போதாது என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் சுமார் 83 ஆயிரம் பேர் உள்ளூர் அளவில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ராணுவ வீரர்களை மட்டும் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டால் இவர்கள் மேற்கொண்டு செயல்படுத்தி வந்த பொறுப்பு சிஆர்பிஎஃப் வீரர்களிடம் ஒப்படைக்கப்படும். அதுபோல ஒரேயடியாக அனைத்து ராணுவ வீரர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள். மாறாக படிப்படியாகவே இவர்கள் விலக்கிக்கொள்ளப்படுவார்கள். இவர்கள் முற்றிலுமாக திரும்பப்பெறப்பட்ட பின்னர் மத்திய ஆயுதக் காவல் படை பாதுகாப்பு பணியில் கூடுதலாக ஈடுபடுத்தப்படும்.

ஆலோசனை
இவர்களின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட பகுதியில் நிலவும் பதற்றத்தை பொறுத்து மாறுபடும். ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டால் திடீரென தாக்குதல் சம்பவங்கள் நிகழலாம் என்பதால் அனைத்து உளவு நிறுவனங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. எனினும் தற்போது வரை இது ஆலோசனையில் மட்டுமே இருக்கிறது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications