சென்னை- சேலம் விரைவு சாலை.. அடுத்தாண்டு தான் டெட் லைன்.. இது மட்டும் இல்லை! 11 மெகா பிளான் இருக்காம்
டெல்லி: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 11 எக்ஸ்பிரஸ் வே மற்றும் நெடுஞ்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் சென்னை- சேலம் இடையேயான எக்ஸ்பிரஸ் வே திட்டமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு நாடும் அல்லது பகுதியும் வேகமாக வளர்ச்சி அடையச் சாலை போக்குவரத்து ரொம்பவே முக்கியம். நல்ல தரமான சாலைகள் இரு நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை எளிமையாக்குகிறது.

மேலும், சரக்கு போக்குவரத்திற்கான செலவையும் கணிசமாகக் குறைக்கிறது. இதன் காரணமாகவே முக்கிய நகரங்களை இமைக்கும் வகையிலான சாலை திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நெடுஞ்சாலைகள்: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டில் மொத்த 91,287 கிலோமீட்டர்கள் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் இருந்தன. இது 2024ல் 1.6 மடங்கு அதிகரித்து 1,46,145 கி.மீ ஆக இருக்கிறது. 2023-24ம் ஆண்டில் மட்டும் 12,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகள் போடப்பட்டுள்ளன.
அதாவது தினசரி 33 கி.மீ. நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் தான் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 11 எக்ஸ்பிரஸ் வே மற்றும் நெடுஞ்சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 11 எக்ஸ்பிரஸ் வே மற்றும் நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 5,467 கி.மீ. ஆக இருக்கும். இவை 16 மாநிலங்கள் வழியாகச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு: நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து மிகச் சிறப்பாக இருப்பதை இது உறுதி செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொடங்க முயன்று வருகிறது. விரைவாகச் சாலைப் பணிகள் முடிந்தால் மட்டுமே செலவும் குறையும். மக்களுக்கும் அது வசதியாக இருக்கும்.
11 நெடுஞ்சாலைகள்: மத்திய அரசு திட்டமிட்டுள்ள எக்ஸ்பிரஸ் வே மற்றும் நெடுஞ்சாலைகளின் தகவல்களும் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லி- மும்பை (1350 கி.மீ.), டெல்லி- கத்ரா (670 கி.மீ.), டெல்லி- டேராடூன் (210 கி.மீ.), ராய்ப்பூர்- ஹைதராபாத் (330 கி.மீ.), இந்தூர்- ஹைதராபாத் (713) சூரத்- சோலாப்பூர் (464 கிமீ.). நாக்பூர்-விஜயவாடா (457 கிமீ) ஆகிய திட்டங்கள் அடங்கும்.
மேலும், சென்னை- சேலம் (277 கிமீ), சோலாப்பூர்- குண்ட்லூர் (318 கிமீ), நாக்பூர்-விஜயவாடா (457 கிமீ) மற்றும் ஹைதராபாத்- விசாகப்பட்டினம் (221 கிமீ) ஆகிய நகரங்களை எக்ஸ்பிரஸ் வே மூலம் இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 11 திட்டங்களில் டெல்லி- டேராடூன் மற்றும் டெல்லி- மும்பை ஆகியவற்றின் கட்டுமானம் இந்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்துமே பல கட்டங்களாகப் பிரித்துக் கட்டப்படும். சாலைகள் முழுமையாகத் தயாரான பிறகே அவை பயன்பாட்டிற்கு வரும்.
சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ் வே: இந்த லிஸ்டில் சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ் வே இருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை சேலம் பசுமை வழிச் சாலை குறித்த அறிவிப்பு முதலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது வெளியானது. இத்திட்டத்திற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications