ஈரான் போர் எதிரொலி.. மத்திய அரசின் அடுத்த வரி குறைப்பு.. பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு ஜீரோ வரி..!
டெல்லி: மத்திய அரசு, மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக உலகளாவிய சப்ளை செயின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், முக்கியமான பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் விதமாக முழுமையான வரிவிலக்கு வழங்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏப்ரல் 2 முதல் அமலுக்கு கொண்டு வரும் வரையில் மத்திய இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த வரிவிலக்கு ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும்.
பெட்ரோல், டீசல், எரிவாயு தாண்டி இந்தியாவில் பெட்ரோகெமிக்கல் பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக மருந்து உற்பத்தி, பெயிண்ட், டெக்ஸ்டைல், பேகேஜிப் மற்றும் பொம்மை உற்பத்தி போன்ற பல துறைகள் பல்வேறு விதமான பெட்ரோகெமிக்கல் பொருட்களை உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலியம் சார்ந்த அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை மூலப்பொருளாக பயன்படுத்தும் அனைத்து உற்பத்தி துறையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பை குறைக்கும் விதமாக மத்திய அரசு இப்புதிய வரி விலக்கு கொடுத்துள்ளது.
எந்த பொருட்களுக்கு வரிவிலக்கு?
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அமோனியம் நைட்ரேட், மெத்தனால், ஸ்டைரின், அசிட்டிக் ஆசிட் மற்றும் பாலிவினைல் குளோரைடு (PVC) போன்ற முக்கிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் வெளிநாட்டு இறக்குமதிக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அமோனியம் நைட்ரேட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த Agriculture Infrastructure and Development Cess (AIDC) வரியும் ஏப்ரல் 2 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு மூலம் விவசாய மற்றும் தொழில்துறை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்கள் செலவுகளை குறைக்கும். இதனால் உற்பத்தி பொருட்களின் விலை நிலைகள் கட்டுக்குள் வைக்கப்படும்.
எரிபொருள் வரி குறைப்பு
மத்திய அரசு இதற்கு முன், மார்ச் 27-ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியையும் குறைத்தது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13 இருந்த வரி ரூ.3 ஆக குறைக்கப்பட்டது. டீசலுக்கு இருந்த ரூ.10 வரி முழுமையாக நீக்கப்பட்டு பூஜ்ஜியமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
கடுமையான பாதிப்பு
ஈரான் போர் காரணமாக, உலகளாவிய பெட்ரோ கெமிக்கல் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் பல இடத்தில் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த உயர்வை ரிபைனரிகள் நேரடியாக downstream தொழில்துறை அதாவது பெட்ரோல், டீசல் தாண்டி உபரி உற்பத்தி பொருட்கள், 2ஆம் நிலை, 3ஆம் நிலை உற்பத்தி பொருட்களுக்கு விலை உயர்வை மாற்றியுள்ளது.
இதனால், மருந்து உற்பத்தி, பெயிண்ட், டெக்ஸ்டைல் மற்றும் பொம்மை உற்பத்தி போன்ற பல துறைகள் கடுமையான செலவின பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்த துறைகளில் பல சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. குறிப்பாக, டெக்ஸ்டைல் உற்பத்தி போன்ற தொழில்கள் அதிகமான வேலைவாய்ப்பை வழங்கும் நிலையில், இந்த திடீர் விலை உயர்வை உடனடியாக வாடிக்கையாளர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் மாற்ற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றன. இதனால் லாபம் குறைந்து, வேலைவாய்ப்பு பாதிப்பு உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்த விலை பாதிப்பு உலகளாவிய பெட்ரோ கெமிக்கல் சப்ளை செயின் முழுமையாக சீராகும் வரை நீடிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வளைகுடா பகுதியில் போர் முடிந்த பிறகே நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் முடிந்து விலை குறைந்தாலும், தற்போது நிறுவனங்களும், பொருளாதாரமும் எதிர்கொண்டுள்ள பாதிப்பை சரி செய்ய சில பல வருடங்கள் ஆகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் விரிவான பட்டியல்:
அன்ஹைட்ரஸ் அம்மோனியா
டொலுயீன்
ஸ்டைரீன்
டைகுளோரோமீத்தேன் (மெத்திலீன் குளோரைடு)
வினைல் குளோரைடு மோனோமர்
மெத்தனால் (மெத்தில் ஆல்கஹால்)
ஐசோபுரோப்பைல் ஆல்கஹால்
மோனோஎத்திலீன் கிளைகால் (MEG)
பினால்
அசிட்டிக் அமிலம்
வினைல் அசிட்டேட் மோனோமர்
சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலம் (PTA)
எத்திலீன்டையமீன்
டை எத்தனால்அமீன் மற்றும் மோனோ எத்தனால்அமீன்
டொலுயீன் டை-ஐசோசயனேட்
அம்மோனியம் நைட்ரேட்
லீனியர் ஆல்கைல்பென்சீன்கள்
எத்திலீனின் பாலிமர்கள் (எத்திலீன்-வினைல் அசிட்டேட் உட்பட)
பாலிபுரொப்பிலீன்
பாலிஸ்டைரீன்
ஸ்டைரீன்-அக்ரிலோநைட்ரைல் (SAN)
அக்ரிலோநைட்ரைல்-பியூட்டாடைன்-ஸ்டைரீன் (ABS)
பாலிவினைல் குளோரைடு (PVC)
பாலிடெட்ராஃப்ளூரோஎத்திலீன்
பாலிவினைல் அசிட்டேட்
பாலிவினைல் ஆல்கஹால்
பாலி (மெத்தில் மெதக்ரிலேட்)
பாலிஆக்ஸிமெத்திலீன் (POM - அசிட்டல்)
பாலியோல்கள்
பாலியீதர் ஈதர் கீட்டோன் (PEEK)
எபோக்சி ரெசின்கள்
பாலிகார்பனேட்டுகள்
ஆல்கைட் ரெசின்கள்
பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) சிப்ஸ்
அன்சாசுரேடெட் பாலியஸ்டர் ரெசின்கள்
பாலிபியூட்டிலீன் டெரெப்தாலேட்
ஃபார்மால்டிஹைடு, யூரியா ஃபார்மால்டிஹைடு, மெலமைன் ஃபார்மால்டிஹைடு, பினால் ஃபார்மால்டிஹைடு
பாலியூரித்தேன்கள்
பாலிபெனிலீன் சல்பைடு (PPS)
பாலிபியூட்டாடைன், ஸ்டைரீன் பியூட்டாடைன்












Click it and Unblock the Notifications