இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.. மத்திய அரசு எடுத்த மிக முக்கிய முடிவு!
டெல்லி: கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வழி வகை செய்யும் புதிய குடிவரவு சட்ட வரம்புக்குள் இலங்கை தமிழர்கள் வரமாட்டார்கள்.
இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போர் நீடித்து வந்ததால், உயிர் பிழைக்கவும் வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சட்டப்பூர்வமாக தங்க அனுமதி
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளித்து, சட்டப்பூர்வ இந்திய குடிமக்களாக கருதவேண்டும் என்பது நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் விடுத்து வரும் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில்தான், மத்திய அரசு இந்த விவகாரத்தில் மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு விலக்கு
அண்மையில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. அதாவது எளிதாகச் சொல்வதெனில், அரசிடம் பதிவு செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் ஆவணமற்ற குடியேறிகளாகக் கருதப்படமாட்டார்கள் என்பதேயாகும்.
மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்திய குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், உரிய ஆவணங்கள் இன்றி, அதாவது பாஸ்போர்ட், விசா அல்லது செல்லுபடியாக கூடிய ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்தால், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வழிவகை செய்கிறது.
அபராதம் தள்ளுபடி செய்யப்படும்
உள்துறை அமைச்சகம் விலக்கு அளித்துள்ளதால், இலங்கை தமிழ் அகதிகள் இந்த வரம்பிற்குள் வரமாட்டார்கள். முன்னதாக, 2015 டிசம்பர் 16 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு நிர்வாக உத்தரவை வெளியிட்டது. ஜனவரி 9, 2015-க்கு முன்னர் வந்த இலங்கை அகதிகள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விசா கட்டணம் மற்றும் அதிக நாட்கள் தங்கியதற்கான அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2024 டிசம்பர் 31 வரை
அதேபோல, செப்டம்பர் 2 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:- மதரீதியான துன்புறுத்தலிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2024 டிசம்பர் 31 வரை இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பாஸ்போர்ட் அல்லது பிற பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டிலேயே தங்க அனுமதிக்கப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications