ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்னமும் அவகாசம் தாங்க மை லார்ட்... உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை!
டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கூடுதல் கால அவகாசம் தர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாமதம் செய்கிறார்; நிலுவையில் வைத்துள்ளார்; மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச்: இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாடு ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை; சட்டசபையில் 2-வது முறையாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதில் உச்சநீதிமன்றம் காத்திருக்கிறது. இந்த வழக்கு டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுஇறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு வாதம்: முன்னதாக தமிழ்நாடு அரசு தரப்பில், ஆளுநர் மசோதாக்களை எந்த ஒரு குறிப்பும் இல்லாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தை மீறியதாக இருக்கிறது. ஆளுநர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்; மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்; ஆளுநர் withhold assent என்ற வெறுமனே சொல்ல முடியாது; அதற்கு காரணத்தை குறிப்பிட வேண்டும் என்கிறது அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு. என வாதிடப்பட்டது.
மத்திய அரசு வாதம்: மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி, ஆளுநர் என்பவர் வெறும் டெக்னிக்கல் சூப்பர்வைசர் கிடையாது. மொத்தம் 182 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டார். தற்போது நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க கால அவகாசம் தர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் தந்தே ஆக வேண்டும் என மறைமுகமாக அழுத்தம் தர முடியாது என வாதிட்டார்.












Click it and Unblock the Notifications