ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி.. அதிகாரி உள்பட சக வீரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்ற சிஐஎஸ்எப் வீரர்.. என்ன நடந்தது?
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், உதவி கமாண்டன்ட் உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். சக வீரர்களையே சிஐஎஸ்எப் வீரர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம், பாதுகாப்பு படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் பசோலி மலைப்பகுதியில் சேவா நீர்மின் திட்டம் உள்ளது. இந்த நீர் மின் திட்ட பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அங்கு பணியில் ஈடுபடும் வீரர்களுக்காக முகாம் ஒன்றும் அங்கேயே உள்ளது. இந்த நிலையில்தான், சிஐஎஸ்எப் வீரர்களுக்கான முகாமில் வைத்து இன்று மாலை 6.40 மணியளவில் வீரர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபத்தின் உச்சிக்கே சென்ற தலைமை தலைவர் அவதேஷ் குமார் சிங் என்பவர், அலுவலகத்தில் உள்ள தனது அறைக்கு சென்று அங்கிருந்து ஏகே47 துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து கோபம் தணியாமல், அங்கு இருந்த சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், உதவி கமாண்டன்ட் அங்கித் குமார் பாண்டே, சப் - இன்ஸ்பெக்டர் லக்ஷ்மண் சிங், காவலர்கள் ரபிக் அகமது மற்றும் சந்தீப் குமார் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக 4 பேரும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய தலைமை காவலர் அவதேஷ் குமார் சிங் கைது செய்யப்பட்டார்.
போலீசார் அவரிடம் தொடர்ந்து விசரணை நடத்தி வருகிறார்கள். அவதேஷ் குமார் சிங் துப்பாக்கியால் சுட்டது ஏன் என்பது குறித்து பலேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற சிஐஎஸ்எப் முகாமிற்கு உயரதிகாரிகள் விரைந்து உள்ளனர். வாக்குவாதத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசரணையை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
