தேச துரோக சட்டங்கள் தொடர்ந்து வரம்பு மீறி உபயோகிப்பு.. இந்த சட்டம் தேவையா? உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: ஒருவர் கூறும் கருத்தை ஒடுக்க நினைத்தால் தேச துரோக சட்டத்தை அவர்கள் மீது பிரயோகிக்க வாய்ப்பு இருக்கிறது, எனவே, இது தனிநபரின் சுதந்திரத்தை நசுக்குகிறதா என்ற தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்திருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ, தேசத் துரோகம் வழக்குகள் பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில்தான், தேச துரோக பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும், கர்நாடகாவைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எஸ்.ஜி. வொம்பட்கேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தலைமையில், நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ரமணா பல அப்சர்வேஷன்களை தெரிவித்தார்.
தேச துரோக சட்டம் என்பது விடுதலை போராட்ட வீரர்களை ஓடுக்குவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கையில் எடுத்த ஒரு ஆயுதம். நாடு சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் அந்த ஒரு சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டுமா என்று தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.
யாரோ ஒருவர் மற்றொரு நபரின் கருத்துக்களை விரும்பாதபோது இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.
காவல்துறையினர் யாரையாவது ஒடுக்க விரும்பினால், அவர்கள் பிரிவு 124A ஐ பயன்படுத்தலாம். இந்த பிரிவை செயல்படுத்தப்படும்போது எல்லோரும் கொஞ்சம் பயப்படத்தான் செய்வார்கள் என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இந்த சட்டத்தை நீக்க தேவையில்லை என்று வாதிட்டார். "இந்த சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டியதில்லை, வழிகாட்டுதல்கள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
ஒருவர் கூறும் கருத்தை மற்ற தரப்பினர் கேட்க விரும்பவில்லை என்றால், அவர்கள் இந்த வகைச் சட்டத்தைப் பயன்படுத்தலாம், தனிநபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது என்று நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது உச்சநீதிமன்றம். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மத்திய அரசு சார்பாக நோட்டீஸை ஏற்றுக்கொண்டார்.
தேசிய குற்ற பதிவு காப்பகம் (என்.சி.ஆர்.பி) அறிக்கையின்படி, 2010 முதல் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பட்டியலை எடுத்து பார்த்தால், அதில் 10,938 பேர் மோடி அரசு வந்த பிறகுதான் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்கள். மேலும், தேசத்துரோக வழக்குகள் 2016 ல் 35ஆக இருந்தது. 2018 ல் 70 ஆகவும், 2019 ல் 93 ஆகவும் உயர்ந்துள்ளன. ஆனால் குற்றப்பத்திரிகைகள் 17% வழக்குகளில் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2019 ல் தேசத்துரோக வழக்குகளில் தண்டனை விகிதம் 3.3% மட்டுமே. 2019 ஆம் ஆண்டில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக 3,000 போராட்டக்காரர்கள் மீது அடுத்தடுத்து தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2020ம் ஆண்டில், விவசாய சட்டத்திற்கு எதிராக போராடிய 3300 விவசாயிகள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான், தேசத் துரோக வழக்குகள் எச்சரிக்கத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளதாக, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications